ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து போட்டியில் அசத்தும் கோவை பள்ளி மாணவர்கள்: ஊக்கமளிக்கும் பெற்றோர்!!
Author: Rajesh27 January 2022, 1:14 pm
கோவை: கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு ஆடும் ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் கோவை ஆஸ்ரமம் பள்ளியை சேர்ந்த சிறுவர்கள் அசத்தினர்.
தேசிய பள்ளிகளுக்கான விளையாட்டு கூட்டமைப்பில் ஒவ்வொரு ஆண்டும் புதிய விளையாட்டு போட்டிகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு ஆடும் ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து விளையாட்டு போட்டியை சேர்க்கும் வகையில் போட்டிகளின் விதிமுறைகள் மற்றும் இதில் பள்ளி மாணவர்களின் ஆர்வம் குறித்து கூறும் விதமாக கோவை குணியமுத்தூர் தனியார் பள்ளி வளாகத்தில் ரோலர் பாஸ்கெட் பால் போட்டி நடைபெற்றது.
இதில் கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் கோவைப்புதூர் ஆஸ்ரமம் மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஜெய்ஷ்னு மற்றும் அலிப்ஷா ஆகிய சிறுவர்கள் கால்களில் சக்கரத்துடன் பந்தை லாவகமாக கைகளில் தட்டி சென்று கோல் போட்டனர்.
போட்டியில் கலந்து கொண்டது குறித்து மாணவர் ஜெய்ஷ்னு கூறுகையில், சிறு வயது முதலே ஸ்கேட்டிங் பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளதாகவும், இதில் சாதனைகள் பல புரிந்து இருந்தாலும் இந்த விளையாட்டில் புதிய சாதனை புரிவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக போட்டிகளை பள்ளி தாளாளார் இம்ரான் கான் மற்றும் பயிற்சியாளர் அபுதாகீர் ஆகியோர் துவக்கி வைத்தனர். கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு, ஸ்கேட்டிங்கில் மாணவர்கள் கூடைப்பந்து விளையாடியதை அவர்களது பெற்றோர்கள் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர்.