எல்லாமே தேர்தல் நாடகம்… 40, 50 முறை பிரதமர் தமிழகம் வந்தாலும் கூட பாஜக முன்னேறாது ; காங்., எம்பி திருநாவுக்கரசர்..!!

Author: Babu Lakshmanan
8 March 2024, 7:40 pm

மகளிர் தினத்தையொட்டி சிலிண்டர் விலை நூறு ரூபாய் குறைப்பு என்பது மக்களுக்கு சென்றடையுமா என்பதே சந்தேகம் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் மகளிர் தின விழா மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கும் நிகழ்ச்சி திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம், காங்கிரஸ் கட்சிக்கு திருச்சி தொகுதி உறுதியாகி இருக்கிறதா என்கிற கேள்விக்கு?, தற்போது வரை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனவே திருச்சி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி உள்ளார்கள் என்று சொல்ல முடியாது.

என்னைப் பொறுத்தவரை ஏற்கனவே 4 லட்சத்திற்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் நான் இங்கு வெற்றி பெற்றிருந்தேன். தற்போது மீண்டும் போட்டியிட வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்து இருக்கிறேன். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். கடைசியாக முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியாக எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்கிற விவரங்களை வெளியிடுவார்கள்.

தற்போது வரையிலும் கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கையை தான் அறிவித்திருக்கிறார்களே தவிர, எந்தெந்த தொகுதிகள் என்று அறிவிக்கவில்லை, எனக் கூறினார்.

மகளிர்காக நூறு ரூபாய் சிலிண்டர் விலை குறைக்க இருப்பதாக தற்போது மோடி அறிவித்திருக்கிறார் என்கிற கேள்விக்கு?, தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. குறிப்பாக வருகின்ற 12ஆம் தேதி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த அறிவிப்பு தேர்தலை கருத்தில் கொண்டு அறிவித்தது என்று தான் எடுத்து கொள்ள முடியும். இந்த நூறு ரூபாய் குறைப்பு என்பது மக்களுக்கு சென்றடையுமா என்பதே சந்தேகம், எனக் கூறினார்.

தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரே மாதத்தில் நான்கு, ஐந்து முறை வந்து சென்றிருக்கிறார் என்கிற கேள்விக்கு?, அவர் 40, 50 முறை வந்தாலும் கூட தமிழகத்தில் பிஜேபிக்கு முன்னேற்றம் வரப்போவதும் இல்லை. எந்த மாற்றங்களும் வரப்போவதில்லை, என தெரிவித்தார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 359

    0

    0