எம்பி சீட் கொடுக்காமல் திமுக ஏமாற்றியதா….? கொந்தளிக்கும் கூட்டணி கட்சிகள்!!

Author: Babu Lakshmanan
11 March 2024, 9:18 pm

திமுக கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளுக்குமான தொகுதி பங்கீடு திருப்திகரமாக முடிந்துவிட்டது என்று முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினாலும் கூட அக் கூட்டணிக்குள் சலசலப்பும், முணுமுணுப்பும் உரக்க கேட்கத் தொடங்கி இருக்கிறது.
இதனால், திமுக தலைமை பலத்த அதிர்ச்சிக்கும் உள்ளாகி உள்ளது.

ஏனென்றால் இந்த முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தலைமை தொடங்குவதற்கு முன்பாக அக் கூட்டணியில் உள்ள விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய நான்கு கட்சிகளுமே தங்களுக்கு குறைந்தபட்சம் மூன்று தொகுதிகளையாவது ஒதுக்கித் தரவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தன.

திடீரென்று இந்த கட்சிகள் ஏன் இப்படி கேட்கின்றன என்பது புரியாமல் நீண்ட காலமாக திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியும், வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியும் தங்களுக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஒரு தொகுதியை ஒதுக்கவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினை கேட்டுக்கொண்டன.

ஒருவேளை பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி விட்டதால் எங்களுக்கு இன்னொரு பெரிய கட்சியின் கதவும் திறந்தே தான் இருக்கிறது, என்பதை மறைமுகமாக உணர்த்தும் விதமாக திமுக கூட்டணி கட்சிகள் அத்தனையும் இப்படி கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்தனவா? அல்லது ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து விடக்கூடாது என்பதற்காக அதிகத் தொகுதிகளை கேட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுத்தனவா என்பது தெரியவில்லை. எப்படியோ ஒரு வழியாக தொகுதி பங்கீடு பிரச்சினை திமுக கூட்டணியில் முடிவுக்கு வந்துவிட்டது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யும்படி கேட்ட அத்தனை கட்சிகளையும் அறிவாலயத்திற்கு வரவழைத்து திமுக பேச்சுவார்த்தை நடத்தியதுதான். அந்த வகையில் வரும் தேர்தலில் தங்களுக்கு ஒரு எம்பி தொகுதியை ஒதுக்கித் தருமாறு கோரிக்கை வைத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரை கடந்த மார்ச் இரண்டாம் தேதி திமுக தலைமை அறிவாலயத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தையும் நடத்தியது.

ஆனால் பேச்சு நடந்ததோடு சரி! இந்த இரு கட்சிகளுக்கும் ஒரு தொகுதியை கூட திமுக ஒதுக்கவில்லை. மனிதநேய மக்கள் கட்சியோ எங்களுக்கு நாடாளுமன்ற தொகுதி தராவிட்டால் கூட பரவாயில்லை, ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டையாவது கொடுங்கள் என்று கெஞ்சியது. அதற்கும் திமுக மசியவில்லை.

அதேநேரம் மார்ச் 9ம் தேதி மதியம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனை அறிவாலயத்திற்கு வரவழைத்து, அவருக்கு 2025 ம் ஆண்டு ராஜ்ய சபா எம்பி சீட் வழங்கும் விதமாக ஒரு பரஸ்பர ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கையெழுத்தும் போட்டார்.

இது யாருக்கு கடும் கோபத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தியதோ இல்லையோ மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இருவரையும் ரொம்பவே கொதிப்படைய வைத்து விட்டது.

ஏற்கனவே இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அநீதி இழைத்து விட்டது என்ற காரணத்தை கூறி காங்கிரசுக்கு இனி எப்போதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஓட்டு போடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள வேல்முருகன் வரும் தேர்தலில் கடலூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கினால் நாங்கள் தேர்தல் வேலை செய்ய மாட்டோம்” என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில்தான் மார்ச் 10ம் தேதியன்று மனிதநேய மக்கள் கட்சியின் அவசர உயர் மட்ட நிர்வாக குழு கூட்டம் சென்னையில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை நிலைய நிர்வாகிகள், மாநில செயலாளர்கள் என 20 பேர் வரை கலந்து கொண்டனர்.

அப்போது திமுக நடந்து கொண்ட விதம் குறித்து இக் கூட்டத்தில் காரசாரமான விவாதமும் நடத்தப்பட்டுள்ளது. அது பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக திமுக தலைமைக்கு பலத்த அதிர்ச்சி தருவதாக இது அமைந்துள்ளது.

அந்த விவாதத்தில் பேசப்பட்டதாக கூறப்படுவது இதுதான்:

நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு விஷயத்தில் திமுக நம்மை வெகுவாக ஏமாற்றிவிட்டது. மதிமுகவுக்கு நெருக்கடி அளிப்பதற்காக நம்மையும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனையும் கூட்டணி பேச்சுவார்த்தை என்ற போர்வையில் அழைத்துப் பேசி நம்மை ஒரு கருவியாக திமுக தலைமை பயன்படுத்திக் கொண்டு விட்டது.

2019 தேர்தலிலும் நமக்கு கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்தத் தேர்தலிலும் நமக்கு இடம் தரவில்லை. அப்படி இருக்கும்போது நாம் ஏன் திமுகவுக்காக தேர்தல் வேலை செய்ய வேண்டும்?… கட்சி தொடங்கியது முதல் நேற்று வரை திமுகவை திட்டிக் கொண்டிருந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு கூட ஒரு ராஜ்ய சபா எம்பி ஒதுக்கப்படுகிறது.

ஆனால் ஆண்டாண்டு காலமாக தேர்தல் களத்தில் திமுகவின் வெற்றிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் நமது கட்சியை திமுக திட்டமிட்டு அவமதித்து இருக்கிறது. அதனால் திமுகவுக்கு இந்த தேர்தலில் நாம் வேலை செய்ய வேண்டாம். திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நாம் தோழமை அடிப்படையில் பணியாற்றலாம். இல்லையென்றால் கூட்டணியை விட்டு நாம் வெளியேறிவிடலாம்.

இப்படி மாவட்ட நிர்வாகிகள் அத்தனை பேருமே திமுக தலைமை மீது கடுமையான கொந்தளிப்பில் இருப்பதால் கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தை வரும்13ம் தேதி திருச்சியில் கூட்டுவதற்கு மனிதநேய மக்கள் கட்சி முடிவெடுத்து இருக்கிறது.

இக் கூட்டத்தில் மூன்று விதமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே தீர்மானித்ததுபோல் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் மனிதநேய மக்கள் கட்சி, ஒதுங்கிக் கொள்ளலாம். அல்லது முழுவதுமாக நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கலாம். இல்லையென்றால் அதிமுக கூட்டணியில் இணைந்து வரும் தேர்தலில் ஒரு தொகுதியை கேட்டு வாங்கி போட்டியிடலாம்.

ஆனால் இதில் மூன்றாவது முடிவை மனிதநேய மக்கள் கட்சி எடுக்குமா? என்பது சந்தேகம்தான். ஏனென்றால் 9 ஆண்டு காலமாக அக்கட்சி திமுக கூட்டணியில் இருக்கிறது. அதனால் சட்டென்று அதை முறித்துக் கொள்ளும் வாய்ப்பு குறைவு.

எது எப்படி இருந்தாலும் தங்களுக்கு ஒரு எம்பி சீட்டை திமுக தலைமை ஒதுக்காததால் மனித நேய மக்கள் கட்சியும் தமிழக வாழ்வுரிமை கட்சியும் மனம் நொந்து போய் இருப்பது நிஜம்! அது வரும் தேர்தலில் எதிரொலிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

  • Allu Arjun Pushpa 2 Global Successடாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
  • Views: - 277

    0

    0