பசும்பொன் பயணம்… EPS எதிர்கொள்ளும் சவால்கள்… திமுகவுக்காக பிரசாந்த் கிஷோர் போட்ட கணக்கு
Author: Babu Lakshmanan31 October 2023, 9:05 pm
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமம் சென்று அங்கு நடந்த குரு பூஜை நிகழ்ச்சியில் முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் அவர் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது கற்களையும், காலணிகளையும் வீசியதை பெரும்பாலான டிவி செய்தி சேனல்களும் சமூக ஊடகங்களும் பரபரப்பு செய்தியாக வெளியிட்டன.
இதில், மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி,தேவரின் தங்க கவசம் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது, அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்த பின்பு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி பசும்பொன் சென்றது, அப்போது செய்தியாளர்கள் அரசியல் ரீதியாக சில கேள்விகளை எழுப்பியபோது அதற்கு அவர் மிகவும் சாதுர்யமாக ‘இது புனிதமான இடம்.
இங்கு அரசியல் பேசுவது நாகரிகமானது அல்ல’ என்று பதில் அளித்தது போன்றவை பின்னுக்கு தள்ளப்பட்டு எடப்பாடி பழனிசாமியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மட்டுமே முக்கியத்துவம் பெற்றது. அது தொடர்பான கார சார விவாதங்களையும் டிவி செய்தி சேனல்கள் நடத்தின. அவற்றை பொறுத்தவரை பரபரப்பாக செய்தி வெளியிட்டால்தான் டிஆர்பி ரேட்டிங் எகிறும் என்பதால் இதற்கு முக்கியத்துவம் கொடுத்ததில் எந்த தவறும் இல்லை.
ஆனால் இந்த ஒரே சம்பவத்தை வைத்து இதுவரை டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா மூவரையும் கிண்டலும், கேலியும் செய்து வந்த திமுக ஆதரவு அரசியல் விமர்சகர்கள் சிலரும், டிடிவி தினகரனின் அமமுகவின் நிர்வாகிகள் சிலரும் ஒரே நேரத்தில் கைகோர்த்துக்கொண்டு பல்வேறு விமர்சனங்களை முன் வைத்ததுதான் தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி உள்ளது.
அவர்களில் ஒருவர், “தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு இனி ஒரு இடம் கூட கிடைக்காது. அத்தனை தொகுதிகளிலும் டெபாசிட் காலி. எடப்பாடி பழனிசாமி செய்த மிகப்பெரிய தவறு, அவர் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியிருக்கக்கூடாது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி ஒரு மாதத்துக்கு மேலாகி விட்ட நிலையிலும் கூட அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. அதிமுகவை கண்டாலே அலறி ஓடுகிறார்கள்” என்றெல்லாம் விமர்சனங்களை வைத்தார்.
இன்னும் சிலர், “எடப்பாடி பழனிசாமியை வரவேற்று மதுரை முதல் பசும்பொன் வரை வழிநெடுக வைக்கப்பட்டிருந்த பேனர்களும், அதிமுக கொடிகளும் சேதப்படுத்தப்பட்டன. எடப்பாடி பழனிசாமியை, பவுன்சர்களுடன் தேவர் நினைவிடத்துக்கு அழைத்து செல்லும் நிலைமைதான் ஏற்பட்டதே தவிர, அவர் மீது முக்குலத்தோர் சமூக மக்களின் கோபமும், வருத்தமும், அதிருப்தியும் இன்னும் நீங்கவில்லை. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதையும், தென்மாவட்ட மக்கள் கவனிக்காமல் இல்லை” என்றும் அள்ளிவிட்டனர்.
விவாதத்தை முடிக்கும்போது கூட இவர்களின் ஒரே நோக்கம், 2024 தேர்தலில் தமிழகத்தில் திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது என்பதை கட்டமைப்பதாகத்தான் இருந்தது. எங்கு சுற்றி வந்தாலும் இதை மையமாக வைத்தே அவர்கள் கம்பு சுற்றியதையும் காண முடிந்தது.
அதாவது 2024 நாடாளுமன்ற தேர்தல் களத்தில் அதிமுக என்ற ஒரு கட்சியே இல்லை என்பது போல இவர்களில் பெரும்பாலானோரின் கருத்துகள் இருந்தன.
ஆனால் அதிமுக முக்கிய நிர்வாகிகள் தரப்பில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுவது பாஜக மேலிடம் போட்ட கண்டிஷன்கள்தான்.
“தேர்தலில் ஓட்டுகள் சிதறாமல் இருக்க டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா மூவரையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவேண்டும், 2024 தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும், 40 எம்பி சீட்டுகளையும் ஆளுக்கு 20 தொகுதிகளாக பிரித்துக் கொள்வோம்’ அதில் அமமுகவுக்கு 4, ஓபிஎஸ்-க்கு 2 மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை நாங்களே ஒதுக்குவோம். 2026 தமிழக தேர்தலில் அண்ணாமலைதான் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார்”என்று ஒரே நேரத்தில் ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இதை ஏற்றுக்கொண்டு விட்டால் வெகுவிரைவில் அதிமுக என்கிற கட்சியே இல்லாமல் போய்விடும்.
ஏற்கனவே டிடிவி தினகரன், சசிகலா இருவரும் ஜெயலலிதா, தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை தவறாக கையாண்டு அதிமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளை கொத்தடிமைகள் போலவே நடத்தி வந்தனர். அதில் ஓபிஎஸ்ஸும் ஒருவர்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களும் சரி, கட்சி நிர்வாகிகளும் சரி மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டனர். அதனால்தான் சசிகலா, டிடிவி தினகரன் என்றாலே அதிமுகவினர் அஞ்சி நடு நடுங்கும் நிலைமை நிலவுகிறது. அப்படிப்பட்டவர்கள் மீண்டும் அதிமுகவிற்குள் வந்தால் கட்சி என்ன ஆகும்? என்பதால், அதனால் ஏற்படும் விபரீதத்தை உணர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து, அதிமுக வெளியேறியது.
மேலும் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை சிறுபான்மையினரின் ஓட்டுகள் கணிசமான அளவிற்கு அதிமுகவிற்கு கிடைத்து வந்தது. ஆனால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பாஜகவை ஒரு மதவாத கட்சி என்ற ஒரு மாயத்
தோற்றத்தை தமிழக மக்களிடையே ஏற்படுத்தி விட்டதால் இனியும் பாஜக கூட்டணியில் நீடிக்க வேண்டாம் என முடிவெடுத்து வெளியேறிவிட்டது என்று இன்னொரு முக்கிய காரணமும் அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.
“தமிழகத்தில் பாஜகதான் தங்களது முதல் எதிரி என்று சமீப காலமாகவே திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பேசி வருவது பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அளித்த ஆலோசனையின் அடிப்படையில்தான்” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
“ஏனென்றால் பாஜகவை மட்டுமே பிரதான எதிரியாக தமிழக மக்கள் முன்பு கொண்டு சென்றால் அதிமுகவை மறந்துவிட்டு திமுகவுக்கு ஒட்டுமொத்தமாக வாக்களிப்பார்கள். இதனால் மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுகவால் எளிதில் கைப்பற்றி விடமுடியும் என்பது பிரசாந்த் கிஷோரின் கணக்கு.
அதேநேரம் மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைவது மிகவும் கடினம். ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுவது சிரமமாகத்தான் இருக்கும். அப்படியே ஜெயித்தாலும் பாஜக தனிப்பெரும் கட்சியாகதான் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று திமுக நினைக்கிறது.
260 அல்லது 265 இடங்களில் பாஜக வெற்றி பெற்று தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் என்ன மாதிரியான முடிவை எடுப்பது என்ற குழப்பமும் திமுகவிடம் உள்ளது. குறைந்தபட்சம் தங்களுக்கு 18 எம்பிக்கள் கிடைத்து விடுவார்கள் என்று நம்பும் திமுகவுக்கு அப்போது பாஜகவுடன் அனுசரித்துப் போகும் கட்டாய நிலையும் ஏற்படலாம் என்பதை அக்கட்சியின் சீனியர் தலைவர்கள் நன்கு உணர்ந்தும் உள்ளனர்.
தற்போது டெல்லியில் மத்திய பாஜக அரசிடம் தங்களுக்கு சாதகமாக பேச திமுகவில் நம்பகமான எம்பிக்கள் இல்லையென்றும் மேலும் டி ஆர் பாலு, தயாநிதிமாறன், கனிமொழி போன்றோருக்கு டெல்லியில் முக்கியத்துவம் கொடுப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதனால் பாஜகவை முழுமையாக நம்பும் ஓபிஎஸ்ஐ தங்களுக்காக டெல்லியில் பயன்படுத்திக் கொள்ள அறிவாலயம் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாகவே இன்று வரை தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கையை ஓபிஎஸ்சிடம் இருந்து பறிக்காமல் திமுக அரசு செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
இன்னொரு புறம், ஓபிஎஸ்க்கு பக்க பலமாக நிற்பதால் அவர் சார்ந்த முக்குலத்தோரின் ஓரிரு சதவீத ஓட்டு நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் பக்கம் வரும் என்றும் திமுக கருதுகிறது. இதே காரணத்திற்காகத்தான் டிடிவி தினகரனை சமீபகாலமாக திமுக தலைவர்கள் யாரும் கடுமையாக விமர்சிப்பதில்லை.
இதனால்தான் திமுக ஆதரவு ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் பசும்பொன் சம்பவத்தை பெரிதுபடுத்தி எடப்பாடி பழனிசாமியை கிண்டலடித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அண்ணாமலை தலைமையிலான பாஜக இளைஞர்களிடம் சமூக ஊடகங்கள் வழியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான். அண்ணாமலையும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கிறார்.
ஆனால் அது எந்த அளவிற்கு தேர்தலில் வாக்குகளாக மாறும் என்பதை இப்போதே கணிக்க இயலாது.
ஏனென்றால் திமுகவுக்கு அடுத்து வலுவான அடிப்படை கட்டமைப்பை கொண்டிருக்கும் அதிமுகதான் அனைத்து தரப்பு மக்களிடையேயும் மிகுந்த நெருக்கத்தை வைத்துள்ளது. எனவே திமுகவுக்கு, மாற்று அதிமுகதான் என்ற எண்ணம்தான் அவர்களிடம் ஏற்படும். 50 ஆண்டுகாலமாக நடைமுறையில் உள்ள இந்த வழக்கத்தை உடனே மாற்றுவது எளிதான காரியமும் அல்ல.
அதிமுகவைப் பொறுத்தவரை, டெல்லி பாஜக மேலிடம் எங்கள் கூட்டணியில் அதிமுக இல்லை என்பதை அறிவித்தால் மட்டுமே சிறுபான்மையினரின் கணிசமான வாக்குகள் அக்கட்சிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இதுவரை பாஜக மேலிடம் அதிகாரப்பூர்வமாக அப்படி எதையும் அறிவிக்கவில்லை. அதனால்தான் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி விட்டது என்று கூறுவதை என்னால் நம்ப முடியவில்லை என்ன ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். ஒருவேளை, ஐந்து மாநில தேர்தல் முடிந்த பிறகு டெல்லி பாஜக இதை அறிவிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
அதேநேரம், ஐந்து மாநிலங்களில் மூன்றை பாஜக கைப்பற்றிவிட்டால் அதிமுகவிற்கு பல்வேறு சோதனைகள் ஏற்படலாம்.
குறிப்பாக அதிமுக எம்எல்ஏக்களை டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் மூலம் நெருக்கடிக்கு உள்ளாக்கி கட்சியை இரண்டாக பிளந்து இரட்டை இலையை முடக்குவதற்கு முயற்சி நடக்கலாம். என்ற போதிலும் மதுரை மாநாட்டுக்கு பிறகு அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் வசம் வந்துவிட்டதால் அது எளிதில் நடக்காத ஒன்றாகவே இருக்கும்.
வலிமையுடன் தனித்து இருக்க விரும்பும் ஒரு பிரதான மாநில கட்சியை வீழ்த்துவதற்கு அரசியல் சதுரங்கத்தில் எத்தகைய சூழ்ச்சி வேண்டுமானாலும் கையாளப்படலாம். எனவே ஐம்பதாண்டு காலம் அரசியலில் உள்ள எடப்பாடி பழனிசாமி தனக்கு கிடைத்த அனுபவங்கள் மூலம் இவற்றை துணிந்து எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.