பொங்கல் பரிசு தொகுப்பில் கொள்ளையடித்த ரூ.500 கோடி பணத்தை தேர்தலில் செலவிட்டுள்ளது திமுக ; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
Author: Babu Lakshmanan19 February 2022, 1:05 pm
சென்னை : நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வீழ்ச்சி அடைவது உறுதி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மந்தைவெளியில் உள்ள ஸ்ரீராஜலட்சுமி மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது வாக்கினை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தற்போது வரை வாக்குபதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணிக்கு மேல் திமுக தனது ஆட்டத்தை காட்டவிழ்ப்பதாக தகவல் கிடைத்துள்ளது. வாக்குப்பதிவு முடியும் வரை அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து வார்ட்டுகளிலும் பரிசு பொருள் பண விநியோகத்தை அமோகமாக நடத்தியிருக்கிறது திமுக. அதிமுகவிற்கு பணத்தின் மீது நம்பிக்கை இல்லை. 9 மாத திமுக ஆட்சிக்கு பதில் சொல்லும் விதத்தில் மக்கள் மெளன புரட்சி நடத்தி அதிமுக-விற்கு அமோக ஆதரவு வழங்கி வருகிறார்கள்.
பொங்கல் பரிசுத்தொகுப்பில் கொள்ளையடித்த 500 கோடி, ஆட்சி தொடங்கியது முதல் கொள்ளையடித்தது என 1000 கோடி ரூபாயை திமுக செலவிட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் திமுக தேர்தல் விதிகளை மீறியுள்ளது. வாக்குப்பதிவு நிலைய முகவர்கள் மிரட்டப்படுகிறார்கள். திமுக என்ன செய்தாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. அவர்கள் வீழ்வது உறுதி.
கோவையில் குண்டர்களை வைத்து திமுக அடாவடி செய்து வருகிறது. அதிமுக புகார் அளித்த பிறகு சில குண்டர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். கோவையில் குண்டர்கள் யாரும் இல்லை என முதல்வர் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது. 9 மாதங்கள் மக்கள்பட்ட துன்பங்கள் இன்று வாக்குகளாக வெளிப்படும், என அவர் தெரிவித்தார்.