அரசு குடியிருப்புகளை கண்டு அஞ்சி ஓடும் அதிகாரிகள்… சிதிலமடைந்த 230 வீடுகள்… தேர்தல் வாக்குறுதிபடி சீரமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை..!!!
Author: Babu Lakshmanan2 January 2024, 9:39 am
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிதிலுமடைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை தேர்தல் வாக்குறுதி படி தமிழக அரசு விரைந்து சீர் அமைக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புகள் 1969ல் கட்டப்பட்டது. இதில் ஏ, பி,சி,டி ஆகிய பிரிவுகளில் மூன்று அடுக்குகள் கொண்ட 230 குடியிருப்பு வீடுகள் உருவாக்கப்பட்டது. அதேபோல் 1990ல் எம், எச், பிரிவு குடியிருப்புகள் கட்டப்பட்டது. இதேலேயும் மூன்று அடுக்குகள் கொண்ட 90 குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு காஞ்சிபுரம் கோட்டாட்சியர் உட்பட பல அரசு துறை அதிகாரிகளும், ஊழியர்களும் குறைந்த வாடகையில் தங்கி வந்தனர்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், குடியிருப்பில் உள்ள அரசு ஊழியர்கள் ஒவ்வொரு பிரிவுக்கும், தனி வாடகை நிர்ணயித்துள்ளது. அவர்களது வீட்டு வாடகை, மாத சம்பளத்தில் பிடிக்கப்பட்டு விடுகிறது. மின் இணைப்பு, வீட்டு பராமரிப்பு ஆகியவற்றை வீட்டு வசதி வாரியம் செய்து வருகிறது.
320 குடியிருப்புகள் உள்ள இந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் மிகவும் சிதிலமடைந்து, வீட்டின் கதவுகள் , ஜன்னல்கள் உடைக்கப்பட்டும், மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தும் மிக மோசமான நிலையில் அனைத்து வீடுகளும், புதர்கள் மண்டி, விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அதேபோல தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு பகுதிகள், சமூக விரோத கும்பலின் புகலிடமாக மாறி மதுபானம் மற்றும் கஞ்சா நடமாட்டம் அதிகம் உள்ள இடமாகவும் மாறி வருகிறது. பல்லவன் நகர் பகுதி ஏற்கனவே செவிலிமேடு பேரூராட்சி எல்லையில் இருந்து மாநகராட்சி எல்லை வரையறுக்கப்பட்ட போது, பல்லவன் நகர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்புகள் காஞ்சிபுரம் மாநகராட்சியின் எல்லையில் வந்துள்ளது.
பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது அவ்வப்போது அந்த இடங்கள் சுத்தப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் வந்த பிறகு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள் சுத்தபடுத்தப்படுவது கைவிடப்பட்டதால், அங்கு ஏற்கனவே வசித்து வந்த அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பணி மாறுதலில் வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.
சென்ற தேர்தலின் போது திமுகவினர் இந்த குடியிருப்பு பகுதிகளை இடித்து தள்ளிவிட்டு புதிதாக கட்டி அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்ததாக அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், தற்போது இந்த இடத்தினை புனரமைக்க எந்த விதமான நடவடிக்கையும் தமிழக அரசோ, மாவட்ட நிர்வாகமோ எடுக்கவில்லை என அரசு ஊழியர்கள் ஆவேசத்துடன் கூறுகின்றனர்.
இதனால் வேறு மாவட்டங்களை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் காஞ்சிபுரத்துக்கு பணியிட மாற்றத்திற்கு வரும்போது , “வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் நிலையைக் கண்டு”, இலவசமாக வீடு அளித்தால் கூட நாங்கள் இங்கு தங்க தயாராக இல்லை என கூறிவிட்டு, புற நகர் பகுதியிலாவது குறைந்த வாடகையில் வீடு கிடைக்குமா என தேடி அலைகின்றார்கள்.
காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் வாடகை அதிகமாக உள்ளதால் வேறு மாவட்டங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் தினந்தோறும் பேருந்திலோ, வாகனத்திலோ காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர். இதனால், அவர்களுடைய நேரமும் வீணாகுகின்றது. மக்களுக்கு உண்டான பணிகளையும் செய்ய இயலவில்லை. பணிகளுக்கும் காலதாமதமாக வருகின்றனர்.
இதுகுறித்து, குடியிருப்பு பகுதியில் வசிக்கும் அரசு வாகன ஓட்டுனர் செல்வராஜ் கூறுகையில், “எங்கள் குடியிருப்பை சுற்றிலும், புதர் மண்டியிருப்பதால், பாம்புகள் அதிகமாக இருக்கிறது. இதனால் இரவில் வெளியில் வரவே பயமாக இருக்கிறது” என்றார்.
இதுபற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் போது ஒரு அரசு அலுவலரிடம் கேட்டபோது, மூன்று வருடமாக இந்த திட்டம் கிடப்பில்தான் போடப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் தமிழக அரசின் மீது மிகவும் கொந்தளிப்பில் உள்ளனர் என தெரிவித்தார்.இதுகுறித்து, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அலுவலரிடம் கேட்ட போது, கூடிய விரைவில் அனைத்து வீடுகளையும் இடித்துவிட்டு புதியதாக கட்ட ஆலோசித்து வருகின்றோம், என தெரிவித்தார்