தூத்துக்குடியில் மேயர் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் : மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ பேட்டி…
Author: kavin kumar23 February 2022, 5:48 pm
தூத்துக்குடி : தூத்துக்குடியில் மார்ச் 4ஆம் தேதி காலையில் மேயருக்கான மறைமுக தேர்தலும், மதியம் துணை மேயர் தேர்தலும் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின்படி திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களை கைப்பற்றி உள்ளனர். வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி மார்ச் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி உரிய ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இது குறித்து மாநகராட்சி ஆணையரும் தனி அலுவலருமான சாருஸ்ரீ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், மாநகராட்சியில் 60 கவுன்சிலர் பதவிக்கு 443 பேர் போட்டியிட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை தவிர களத்தில் நின்ற 320 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். 60 பேருக்கு டெபாசிட் தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி மார்ச் 2-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி அனைவருக்கும் முறையான அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மேயருக்கான மறைமுக தேர்தலும், மதியம் 2.30 மணிக்கு துணை மேயர் தேர்தலும் நடைபெறும். மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலுக்கு போட்டிகள் இருப்பின் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும். அன்றைய தினமே மாமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்பட்டு மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்பு விழாவும் உடனே நடத்தப்படும். மேயர் தேர்தலையொட்டி மாநகராட்சிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்றார்.
0
0