‘ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள்’ : 5 மாநிலங்கள், 5,000 அணிகள், 43,000 கிராமத்து வீரர்கள் பங்கேற்பு!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2024, 1:04 pm

ஈஷா சார்பில் நடைபெறும் ‘பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தை’ முன்னிட்டு, மொத்தம் 55 லட்சம் மதிப்பிலான பரிசு தொகைகளுடன் கூடிய கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் துவங்கியது. தமிழ்நாட்டில் நவ 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதற்கட்ட போட்டிகளில் பல்வேறு இடங்களில் அப்பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஈஷா கிராமோத்சவ திருவிழாவை ஈஷா ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதில் கிராமங்களுக்கு இடையேயான வாலிபால், த்ரோபால் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில் இந்தாண்டிற்கான போட்டிகள் 5 தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் ஒரு யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் நடைபெறுகிறது. 162 இடங்களில் நடைபெறும் முதற்கட்டப் போட்டிகளில் 5,000 அணிகளும் மொத்தம் 43,144 வீரர் வீராங்கணைகளும் பங்கேற்கின்றனர். இதில் 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்ப பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை முதற்கட்ட கிளஸ்டர் அளவிலான வாலிபால் போட்டிகள் 70 இடங்களிலும், த்ரோபால் போட்டிகள் 24 இடங்களிலும், கடந்த 2 நாட்களாக (நவ 16,17 ) நடைபெற்றது. இதில் 6,000 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 30,000 கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான அணிகள் பங்கேற்றன. வாலிபால் போட்டிகளில் 22,522 வீரர்களும், த்ரோபால் போட்டிகளில் 5,098 பெண்களும் போட்டிகளில் விளையாடினர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் அவர்களும், சென்னை பூந்தமல்லியில் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி அவர்களும், தென்காசியில் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் அவர்களும், திருத்தணியில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் அவர்களும் நேரில் போட்டிகளை துவங்கி வைத்தனர். அதேபோன்று ஒசூரில் போட்டிகளை மாவட்ட வனத்துறை அதிகாரி கார்த்திகேயனி துவக்கி வைத்தார்.

Isha

இதுமட்டுமின்றி மதுரை கள்ளந்தரி மற்றும் காரைக்குடி புதுவயல் பகுதிகளில் நடைபெற்ற போட்டிகளுக்கு மாண்புமிகு பத்திர பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தப் போட்டிகள் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட கிளஸ்டர் அளவில் தேர்வான அணிகள் அடுத்து டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெறும் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளன. இதை தொடர்ந்து தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு டிசம்பர் 28-ம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

Isha Gramotsavam Games

சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில், ஈஷா கிராமோத்சவ திருவிழா ஆண்டுதோறும் கிராமப்புற விளையாட்டுகள், கிராமிய கலைகள் மற்றும் உணவு முறைகளை கொண்டாடி புத்துயிர் அளிக்கும் விதமாகவும், உற்சாகமான கிராமிய வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலும் நடத்தப்படுகிறது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 128

    0

    0