நோபல் பரிசு பெற்ற ஐ.நா அமைப்புடன் ஈஷா புரிந்துணர்வு ஒப்பந்தம் : உணவு பற்றாக்குறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்!!

Author: Babu Lakshmanan
21 February 2022, 8:17 pm

இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதுகுறித்து களப் பணி மற்றும் கலந்துரையாடல்களை நடத்தவும் ஈஷா அவுட்ரீச் அமைப்புடன் ஐ.நாவின் உலக உணவு அமைப்பு (UN World Food Programme- WFP) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பு 2020-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற பெருமைக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறுகையில், “ஐ.நா. அமைப்புகளும், உலகில் உள்ள ஒவ்வொரு பொறுப்பான விஞ்ஞானிகளும் இப்போது இருக்கும் மண் வளத்தை கொண்டு அடுத்த 45 முதல் 50 ஆண்டுகளுக்கு மட்டுமே உணவு உற்பத்தி செய்ய முடியும் என மிக தெளிவாக கூறுகின்றனர். 2045-ம் ஆண்டு நம்முடைய உலக மக்கள் தொகை 9.3 பில்லியன் ஆக அதிகரிக்கும் எனவும், அதேசமயம், உணவு உற்பத்தி இப்போது இருப்பதை விட 40 சதவீதம் குறைந்துவிடும் எனவும் எச்சரிக்கின்றனர்.

அடுத்த 25 ஆண்டுகளில் உணவு பற்றாகுறையால் ஏற்பட உள்ள விளைவுகள் என்பது கற்பனை செய்ய முடியாத வகையில் இருக்கும். அவ்வாறு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால் உள்நாட்டு போர் (Civil war) மூளும். இத்தகைய அவலமான நிலையை நம் குழந்தைகள் நிச்சயம் சந்திக்க கூடாது” என கூறினார்.

புதுடெல்லியில் இன்று (பிப்ரவரி 21) நடந்த சந்திப்பில் ஐ.நாவின் உலக உணவு அமைப்பின் இந்திய பிரதிநிதி திரு.பிஷோ பரஜுலி மற்றும் ஈஷா அவுட்ரீச் அமைப்பின் இயக்குநர் திருமதி. மெளமித்தா சென் ஆகிய இருவரும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இது தொடர்பாக திரு.பரஜுலி கூறுகையில், “ஈஷா அவுட்ரீச்சுடன் இணைந்து செயலாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். பசி, பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, நீண்ட கால உணவு பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற பணிகளில் ஈஷாவுடன் இணைந்து செயல்புரிய உள்ளோம்.

சத்குருவால் நிறுவப்பட்டுள்ள ஈஷா அமைப்பிற்கு உலகம் முழுவதும் 11 மில்லியன் தன்னார்வலர்கள் இருக்கின்றனர். எங்களின் விழிப்புணர்வை அதிகப்படுத்துவதில் அவர்கள் தொடர் பங்களிப்பை அளிப்பார்கள்” என்றார்.

திருமதி. மெளமித்தா சென் கூறுகையில், “இந்த நட்புறவின் மூலம் 2 அமைப்புகளும் ’கான்சியஸ் ப்ளானட் – மண் காப்போம்’ இயக்கத்திற்காகவும் இணைந்து செயல்புரிய உள்ளோம். குறிப்பாக, இந்தியாவில் உணவு உற்பத்திக்கு அடித்தளமாக இருக்கும் மண் வளம் அழிந்து வருவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நட்புறவு உதவியாக இருக்கும். அழிந்து வரும் மண் வளப் பிரச்சினையானது நாட்டின் நீண்ட கால உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும். மேலும், இது பருவ நிலை மாற்றம், நீர் மற்றும் பல்லுயிர்களின் பற்றாகுறை, கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

சத்குரு அவர்கள் ‘கான்சியஸ் ப்ளானட் – மண் காப்போம்’ என்ற உலகளாவிய இயக்கத்தை அடுத்த மாதம் தொடங்க இருக்கிறார். மண் வள பாதுகாப்பை மையப்படுத்தி தொடங்கப்படும் இவ்வியக்கம், அது தொடர்பான சட்டங்களை உருவாக்க உலக நாடுகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1304

    0

    0