திமுக திட்டத்துக்கு ஆப்பு வைத்த பாஜக.. மாஸ் அறிவிப்பு!
Author: Hariharasudhan10 November 2024, 7:04 pm
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதந்தோறும் 2,100 ரூபாய் வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.
மும்பை: இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ் சேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி களம் காண்கிறது. அதேபோல், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ் சேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் கூட்டணி போட்டியிடுகிறது.
இதனால் மகாராஷ்டிரா மாநிலத் தேர்தலில் இருமுனைப் போட்டியே நிலவுகிறது. இந்த நிலையில், மும்பையில் நடந்த தேர்தல் நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்று உள்ளன.
குறிப்பாக, சங்கல்ப் பத்ரா 2024 எனும் தேர்தல் வாக்குறுதியில், மகளிருக்கு மாதம் 2,100 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும், முதியோர் ஓய்வூதியம் மாதம் 1,500 ரூபாயில் இருந்து 2,100 ரூபாயாக அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கேப்டன் மகனுக்கு புது பதவி.. புதிர் போட்ட பிரேமலதா விஜயகாந்த்!
அதேபோல், அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் மற்றும் காப்பீடு வழங்கப்படும் எனவும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தரப்பில், மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் விதமாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.