கோவை, நெல்லை போல் அடுத்த மேயர்?நம்பிக்கையில்லா தீர்மானம் : ராஜினாமா செய்ய திமுக மேயர் முடிவு?!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2024, 11:20 am

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மீது 33 மாநகராட்சி உறுப்பினர்கள் கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு வரும் 29 ம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநகராட்சி உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரம் மாநகராட்சி ஆக மாறி முதல் தேர்தலை சந்தித்தது. இதில் திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் வெற்றி பெற்று மேயராக பதவியேற்றார். மென்பொருள் பொறியாளரான இவர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்தப் பதவிக்கு வந்தார்.

கடந்த 2022-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக மகாலட்சுமி பதவியேற்றதில் இருந்தே சிறு, சிறு பிரச்சினைகளுடனே பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக மாநகராட்சி உறுப்பினர்களுக்கும், அவருக்கும் இடையிலான மோதல் அதிகரித்தது. தங்கள் வார்டுகளில் சரிவர பணிகள் நடைபெறவில்லை என்று பல்வேறு மாநகராட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். எதிர்கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி திமுக மாநகராட்சி உறுப்பினர்களும் பலர் குற்றம் சாட்டத் தொடங்கினர்.

பல நேரங்களில் திமுக, அதிமுக, பாமக, தமாக, காங்கிரஸ், பாஜக , சுயேச்சை என அனைத்துக் கட்சி மாநகராட்சி உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து எதிர்த்ததால் சில நேரங்களில் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத சூழல் கூட ஏற்பட்டது.

மாநகராட்சி மேயர், உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் அதிகரித்த நிலையில் கணக்கு குழு, நிதிக் குழு உள்பட பல்வேறு நிலைக் குழு உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களை சமாதானப்படுத்த திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மத்தியில் நடந்த பல கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இதனைத் தொடர்ந்து ஜூன் 7-ம் தேதி திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 33 பேர் சேர்ந்து மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆணையர் செந்தில்முருகனிடம் மனு அளித்தனர்.

அந்த மனு சரிவர இல்லை என்று கூறி ஆணையர் செந்தில்முருகன் திருப்பி அனுப்பினார். இந்நிலையில் மீண்டும் திருத்தப்பட்ட மனுவை மாநகராட்சி உறுப்பினர்கள் அளித்தனர்.

மாநகராட்சி ஆணையர் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர அளித்த மனு மீது நடடிக்கை எடுக்கவில்லை என்று ஆட்சியரிடம் புகார் அளித்தனர். நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் கூறி வந்தனர்.

இந்நிலையில் இந்த மனு மீது வரும் 29-ம் தேதி விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இது தொடர்பான கடிதத்தை அனைத்து மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் ஆணையர் செந்தில்முருகன் அனுப்பியுள்ளார்.

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் அடிப்படையில் மேயரை பதவி நீக்கம் செய்ய 80 சதவீத உறுப்பினர்கள் ஆதவு தேவை. அதன் அடிப்படையில் 51 பேர் உள்ள மாநகராட்சி உறுப்பினர்களில் 41 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே மேயரை பதவி நீக்கம் செய்ய முடியும். 33 பேர் மேயருக்கு எதிராகவும், 13 பேர் மேயருக்கு ஆதரவாகவும் உள்ளனர்.

ஒருவர் மேயருக்கு எதிராக தீவிரமாக இருந்தாலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் மனுவில் கையெழுத்திடவில்லை. மீதமுள்ள உறுப்பினர்கள் எந்தப் பக்கமும் சாராமல் தற்போது வரை உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி 34 பேர் மேயருக்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரமாக உள்ளனர். மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தவர்கள் மீதமுள்ள 7 பேரின் ஆதரவை திரட்டி மேயரை பதவி நீக்கம் செய்ய தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

மேயர் தரப்பு தங்களுக்கு உள்ள 13 திமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் உள்ளவர்கள் மற்றும் சுயேட்டைகளின் ஆதரவை பெற்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி முதல் பெண் மேயரின் பதவி தப்புமா? என்பது வரும் ஜூலை 29-ல் தெரிந்துவிடும். இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் பெரும் பரபரப்பும், பணிகள் முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

விடியா திமுக ஆட்சியில் ஏற்கனவே கோவை திருநெல்வேலி மேயர்களின் பதவி பறிபோன நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜின் பதவி தப்புமா என்ற எதிர்பார்ப்பு காஞ்சிபுரம் மாநகராட்சியில் பெரிதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

  • Azhagi movie young Parthiban actor Satheesh அட இவரா.!அழகி படத்தில் சிறு வயது பார்த்திபனாக நடித்தவரின் தற்போதைய நிலைமையை பாருங்க.!