வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம்… அடுத்த 15 மாதங்களுக்குள் தீர்வு.. 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு : NGT ஜோதிமணி அறிவிப்பு..!!

Author: Babu Lakshmanan
13 October 2022, 5:51 pm

கோவை : பயோ மைனிங் செய்வது மட்டுமே வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு சரியான தீர்வு என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மாநிலக் கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநிலக் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், நீதிபதியுமான ஜோதிமணி கடந்த அக்.,7ம் தேதி வெள்ளலூர் குப்பை கிடங்கை ஆய்வு செய்தார். அப்பொழுது, அப்பகுதியில் உள்ள மக்களிடம் குப்பை கிடங்கால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்.

NGT Meeting - updatenews360

இதையடுத்து, மறுநாள் (அக்.,8) அவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக்கு பின்னர் நீதிபதி ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வெள்ளலூர் குப்பை கிடங்கு செயல்பாடுகள் விதிமுறைகளின்படி செயல்படுகின்றதா என ஆய்வு செய்தோம். குப்பை கிடங்கு மற்றும் அதனை சுற்றி இருக்கும் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. குப்பை கிடங்கால் பொதுமக்கள் நிறைய கஷ்டங்களுக்கு உள்ளாகின்றனர்.

20 ஆண்டுளுக்கு மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது. குப்பை கிடங்கை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், கோவிட் பரவல் காரணமாக அதை சரியாக செய்ய முடியாத நிலை இருந்து வருகின்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொணடனர். ஆட்சியர், ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர். வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு அடுத்த 15 மாதங்களுக்குள் முழுமையாக தீர்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NGT Meeting - updatenews360

இந்த பணி 3 மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படும். கோவை மாநகராட்சியில் தற்போது உள்ள நுண் உர தயாரிப்பு மையங்களை முழுமையாக 4 வாரத்தில் செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குப்பை கிடங்கை முழுமையாக அகற்ற நீதிமன்றம் வழங்கிய சட்டப்படியான காலம் முடிந்து விட்டது என்றாலும், பொதுமக்கள் நலன் கருதி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதலில் குப்பைகளை எந்தெந்த இடங்களில் அகற்ற வேண்டும் என்பதையும் , உடனடியாக சில தீர்வுகள் ஏற்படுத்தும் பணிகளையும் அறிவுறுத்தியுள்ளோம். விஞ்ஞான முறையில் இதற்கு தீர்வு காண வேண்டும். வெள்ளலூரில் நிலத்தடியில் இருக்கும் நச்சு தன்மை கொண்ட தண்ணீர் அகற்றப்பட வேண்டும். 15 மாதங்களில் முழுமையாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களும் இதை செய்து முடிப்பதாக தெரிவித்துள்ளனர்.

vellalore dump yard - updatenews360

நுண்உர தயாரிப்பு மையங்களால் பிரச்சினை இருக்காது, இதை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். குப்பை லாரிகளில் இருந்து குப்பைகள் சிதறாமல் போக வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கின்றோம். பயோ மைனிங் செய்வது மட்டுமே வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு சரியான தீர்வு. குப்பை கிடங்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு மெடிக்கல் கேம்ப் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நிலத்தடி நீர் 200 சதவீதம் டிடிஎஸ் அதிகமாக இருக்கின்றது என மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

vellalore dump yard - updatenews360

நுண்உர தயாரிப்பு மையம் என்ற நடைமுறை கும்பகோணத்தில் முதலில் கொண்டு வரப்பட்டது, இப்போது எல்லா பகுதிகளில் கொண்டுவரப்பட்டு வருகின்றது. இதனால் பாதிப்புகள் கிடையாது. கோவையில் அதிகாரிகள் ஒத்துழைப்பு இருந்தால் விரைவில் வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணமுடியும்.

கோவை மாநகராட்சியில் மொத்தம் 69 நுண் உர தயாரிப்பு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இவற்றில் ஏற்கனவே அமைக்கப்பட்ட 34 மையங்களில் 12 மட்டுமே செயல்பட்டு வருகிறது. செயல்படாத நுண்உர மையங்களை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், புதிய மையங்களை விரைவில் அமைக்கவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.

  • Maharaja movie box office in China பிராமண்டத்தை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி.. சீன பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் VJS!
  • Views: - 895

    0

    0