அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!
Author: Udayachandran RadhaKrishnan8 April 2025, 2:50 pm
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இன்று நீதிமன்றத்தில் ஆஜரானேன். வழக்கு விசாரணைக்கு பின்னர் வரும் 29ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அவர்களுக்கான தொடர்பு தெளிவுபடுத்தப்படவில்லை.
அதேபோன்று அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கிலும் விசாரிக்கப்பட்ட சாமி ரவி, திண்டுக்கல் துரை ஆகியோரை என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அனைத்து என்கவுண்டர்களும் போலியானது. உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல்,
வழக்கை முடிப்பதிலேயே காவல்துறை முனைப்பு காட்டுகிறது.
யார் வேண்டுமானாலும் எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதே எனது நிலைப்பாடு. ஆனால் தமிழுக்கு முதலிடம் அளிக்க வேண்டும். தமிழ் எனக்கு உயிர் மூச்சு. நான் இதுவரை யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டு வருகிறேன்.
தீமையை தீமையால் வெல்ல நினைக்கக் கூடாது. நன்மையால் தீமையை வெல்ல வேண்டும் என கருதுகிறேன். ஆள் மாற்றத்திற்கான அரசியலில் நான் இல்லை. அரசியலமைப்பு மாற்றத்தை உருவாக்க வந்தவன்.
ஆகவே வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டி என்ற இதே நிலைப்பாடு தான். நான் கூட்டணி வைக்கப் போவதே அமெரிக்க அதிபர் ட்ரம்போடுதான் என சிரித்தவாறு கூறினார்.
அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பான கேள்விக்கு, தேர்தல் நேரங்களில் இதுபோன்று சோதனைகள் நடத்துவது வாடிக்கையானது. தேர்தல் நடக்கும் போது நடைபெறும் திருவிழா போன்றது. அமலாக்கத்துறை வருமானவரித்துறை என வருவார்கள்.
சட்டமன்ற செயல்பாடுகள் எப்படி என்ற கேள்விக்கு சட்டமன்றத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் பிரச்சனையை பேசுவதில்லை.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை நான் வரவேற்கிறேன் என தெரிவித்தார்.