மண் பாதுகாப்பு குறித்து கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி… ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு..!!
Author: Babu Lakshmanan22 April 2022, 2:23 pm
உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் இன்று (ஏப்ரல் 22) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு நடந்த இந்நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் #Savesoil டி-சர்ட்களை அணிந்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நின்றனர். மேலும், அங்கு வந்த பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்து மண் அழிவு குறித்தும், அதனால் ஏற்பட போகும் பேராபத்துக்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவ்வியக்கத்தின் தன்னார்வலர்கள் கூறியதாவது:- தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் மண் வளம் மிக வேகமாக அழிந்து வருகிறது. மண்ணை மண் என்று அழைப்பதற்கு அதில் குறைந்தப்பட்சம் 3 சதவீதம் கரிமப் பொருட்கள் (organic content) இருக்க வேண்டும் என ஐ.நா அமைப்புகள் சொல்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள மண்ணில் இந்த அளவு 0.5 மட்டுமே உள்ளது. இதனால், விவசாயம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி நாம் உண்ணும் உணவில் சத்துக்களும் குறைந்து மக்களின் ஆரோக்கியம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
மண் வளம் இழந்ததன் காரணமாக 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருந்து கிடைத்த சத்து இன்று 8 ஆரஞ்சுப் பழங்களை சேர்ந்தால் தான் கிடைக்கிறது. இப்போதுள்ள மண் வளத்தை கொண்டு உலகில் அடுத்த 60 ஆண்டுகளுக்கு மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு கூறியுள்ளது.
மேலும், 2045-ம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 930 கோடியாக அதிகரிக்கும், ஆனால் உணவு உற்பத்தி இப்போது இருப்பதை விட 40 சதவீதம் குறைந்துவிடும் என சர்வதேச விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, மண் அழிவை தடுப்பதற்கு இப்போது நடவடிக்கைகளை தொடங்கினால் தான் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் இந்த அபாயங்களை தடுக்க முடியும்.
இதற்காக, உலக நாடுகள் மண் வள பாதுகாப்பு குறித்து சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈஷா நிறுவனர் சத்குரு அவர்கள் மண் காப்போம் என்ற சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கத்தை தொடங்கி உள்ளார். இது தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஆளுமைகளை சந்திப்பதற்காகவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் 100 நாட்களில் 27 நாடுகளுக்கு 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் செல்லும் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய சத்குரு இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, ஆஸ்திரியா, இத்தாலி சுவிட்சர்லாந்து பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்ப நாடுகளுக்கு பயணித்துள்ளார். அந்த நாடுகளில் வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், சினிமா பிரபலங்கள், ஊடக துறையினர் என பல்வேறு தரப்பினர் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். ஐரோப்பாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் அவர் இந்தியாவிற்கு வந்து தமிழ்நாட்டில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.
சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் மண் காப்போம் இயக்கத்திற்கு எங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தும் விதமாகவும், இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்நிகழ்ச்சியை இன்று நடத்தியுள்ளோம், இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோவை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய மாவட்டங்களிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்றைய தினம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.