சுரேஷ் கோபியின் பெயர் நீக்கம், 24 கட்… எம்புரான் மறு சென்சாரில் திடீர் மாற்றம்…
Author: Prasad2 April 2025, 1:11 pm
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான்
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. வெளியான 5 நாட்களில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது இத்திரைப்படம்.
இதே கூட்டணியில் இதற்கு முன்பு வெளியான “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “எம்புரான்” திரைப்படத்தில் மோகன்லாலுடன் பிரித்விராஜ், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளும் வசனங்களும் ஒரு குறிப்பிட்ட மதத்தை தாக்கி அமைக்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் மோகன்லால் மன்னிப்பு கேட்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் இத்திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் என கூறப்படும் 17 இடங்களில் கட் செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
24 இடங்களில் கட்…
இந்த நிலையில் “எம்புரான்” திரைப்படத்தில் 24 இடங்களில் கட் செய்யப்பட்டுள்ளதாக சென்சார் ஆவணத்தில் இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறை காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளனவாம். அதுமட்டுமல்லாது தேசிய புலனாய்வு அமைப்பை பற்றி இத்திரைப்படத்தில் ஒரு காட்சி இடம்பெறும். அந்த காட்சியையும் நீக்கியுள்ளனர்.
குறிப்பாக வில்லனின் பெயரான பஜ்ரங்கியை பல்தேவ் என்று மாற்றியுள்ளனர். முக்கியமாக இத்திரைப்படத்தில் நன்றி அட்டையில் (Thanks Card) இடம்பெற்ற ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல கூடுதல் மாற்றங்களோடு இத்திரைப்படம் மறு சென்சார் செய்யப்பட்டுள்ளது.