விஜயைச் சுற்றி 11 CRPF படையினர்.. உளவுத்துறை ரிப்போர்ட் என்ன?
Author: Hariharasudhan12 March 2025, 5:52 pm
தவெக தலைவர் விஜய்க்கு நாளை மறுநாளான மார்ச் 14ஆம் தேதி முதல் மத்திய அரசின் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் மற்றும் திரை, விளையாட்டு பிரபலங்களுக்கு, உளவுத் துறை அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு Y, Z என பல்வேறு பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்குகிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டு கட்சி தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதன்படி, நாளை மறுநாள் (மார்ச் 14) முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதன் அடிப்படையில், 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள், சுழற்சி முறையில் விஜயின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், தவெக தலைவராக விஜய் சுற்றுப்பயணம், மாநாடு போன்றவற்றை திட்டமிட்டுள்ள நிலையில், கமாண்டோக்கள் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கவுள்ளனர்.
முன்னதாக, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தவெக நடத்தியது. இதில் விஜய் உள்பட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இஸ்லாமியர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தனது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பங்கேற்ற விஜய், முஸ்லீம்கள் போன்று தலையில் தொப்பி அணிந்திருந்தார்.
இதையும் படிங்க: அதெல்லாம் சொல்ல முடியாது.. இபிஎஸ் உடனான சந்திப்பு.. மனம் திறந்த எச்.ராஜா!
ஆனால், இந்த நிகழ்வில் முஸ்லிம்களை அவமதித்ததாக, தமிழ்நாடு சுன்னத் ஜமாத், விஜய் மீது புகார் அளித்தது. குறிப்பாக, “இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் பலர் குடிகாரர்கள் மற்றும் குண்டர்கள் என்பதால் முஸ்லிம்கள் அவமதிக்கப்பட்டனர். அத்தகைய மக்கள் புனித நிகழ்வில் கலந்து கொள்வது ரமலான் விதிகளை மத ரீதியாகப் பின்பற்றும் முஸ்லீம்களை அவமதிப்பதாகும்” என அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் தனியார் ஊடகத்திடம் கூறியுள்ளார்.