வேலூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி; வைரல் வீடியோவின் உண்மை இதோ.!
Author: Babu Lakshmanan28 March 2024, 2:54 pm
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டு, வேட்பு மனு தாக்கலையும் நிறைவு செய்து விட்டன. தற்போது, வேட்புமனு பரிசீலனை நடந்து வருகிறது.
மத்தியில் தொடர்ச்சியாக 3வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளையில், மாநிலத்தில் கடந்த முறை வெற்றி பெற்றதை போல, இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பார்த்து பார்த்து வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அந்த வகையில், வேலூரில், திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனின் மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான கதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல, கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் களமிறங்கிய ஏ.சி. சண்முகம், இந்த முறை பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டுள்ளார்.
கடும் சவால் நிறைந்ததாகக் காணப்படும் இந்தத் தேர்தல் களத்தில், இருவரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எம்பியாக இருந்த போது மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை பற்றியும், திமுக அரசின் சாதனைகளையும் எடுத்துச் சொல்லி வேலூர் தொகுதியில் வீதி வீதியாக சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் கதிர் ஆனந்த்.
அந்த வகையில், தமிழக அரசு கொடுக்கும் மகளிருக்கான ரூ.1000 உரிமைத் தொகை குறித்து கதிர் ஆனந்த் பேசியதாக ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, ரூ.1000 உரிமைத் தொகை வாங்குவதால், மகளிர் அனைவரும் பளபள-னு இருக்கிறார்கள், என்று கூறுவது போல், அந்த வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
ஆனால், உண்மை நிலை என்ன என்பது குறித்து, “தோல்வி பயத்தில் வீடியோவை தவறாக சித்தரித்துப் பரப்பும் மோடி மீடியா!,” என்ற தலைப்பில், உண்மையான வீடியோவை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தரப்பினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் அவர், ‘எல்லோரும் பவுடர், பேரன் லவ்லி பூசிகிட்டு பளபள-னு இருக்கீங்களே எனக் கேட்க, கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் மாதாமாதம் ஆயிரம் வருதல்ல’ எனக் கூறினார். அதனைக் கேட்டு ஓ….. ரூ.1000 வருதா.. என்று சிரித்தபடி கூறுகிறார்.
ஆனால், இந்த வீடியோவை வெட்டி, ஒட்டி, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு எதிராக பாஜகவினர் பரப்பி விடுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
0
0