மறக்கவே மறக்காது நெஞ்சம்… ஏன்டா வந்தோம்னு இருக்கு : ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி.. ரசிகர்கள் ஆத்திரம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2023, 9:28 am

மறக்கவே மறக்காது நெஞ்சம்… ஏன்டா வந்தோம்னு இருக்கு : ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி.. ரசிகர்கள் ஆத்திரம்!!!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த நாளன்று பலத்த மழை பெய்த நிலையில், ரசிகர்களின் நலன் கருதி இசைநிகழ்ச்சி வேறு ஒரு நாளுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக ஏஆர்ரஹ்மான் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இப்படியான நிலையில் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் நடந்தது.

பெரும் கூட்டம் கூடும் என்பதால் முன்கூட்டியே அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் தங்கள் பயண திட்டமிடல்களை முடிவு செய்யுமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ACTC events நிறுவனம் செய்திருந்த நிலையில், மதியம் 3 மணி முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் 4 மணி ஆகியும் கேட் திறக்கவில்லை என்றும், கடுமையான ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் குளறுபடிகளால் பல கி.மீ.,க்கு முன்னதாகவே வாகனங்களை நிறுத்தி விட்டு பலரும் நடந்தே சென்றனர்.

உள்ளே, ப்ளாட்டினம், டைமண்ட், கோல்ட், சில்வர் என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எந்த டிக்கெட் என்றே சரிபார்க்காமல் வந்தவர்களை உள்ளே அனுப்பியதாக புகார் எழுந்தது. இதனால் உரிய டிக்கெட் இருந்தும் பலரால் நிகழ்ச்சியை பலரால் காண முடியவில்லை.

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒரு சில நெட்டிசன்கள் மிக மோசமான அனுபவத்தை பெற்றதாக கூறியுள்ளார்கள்.

சமூக வலைதளங்களில் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி மற்றும் அதனால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தினார்.

ஏற்கனவே இந்த பகுதியில் டிராபிக் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கும் என சென்னை போக்குவரத்து போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தனர். இந்நிலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதே போல 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும், மறக்கவே முடியாத நெஞ்சம், இது மோசமான இசை நிகழ்ச்சி என ஏ.ஆர் ரகுமானை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர்.

இதனால் ஆவேசத்தில் ‘எங்களுக்கு இசை நிகழ்ச்சியே தேவையில்லை’ என சிலர் டிக்கெட்டுகளை கிழித்தெறிந்து விட்டு வீடு திரும்பினர். இப்படியான நிலையில் ‘மறக்குமா இசை நிகழ்ச்சி’ ரசிகர்கள் மனதில் மறக்காத ரணத்தை ஏற்படுத்தி விட்டது. இதற்கெல்லாம் ஏ.ஆர்.ரஹ்மான் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது.

  • Cool Suresh calls for Bigg Boss ban பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க..கொந்தளித்த கூல் சுரேஷ்..!
  • Views: - 307

    0

    0