இறுக்கிப் பிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்.. அதிபர் கட்டிலில் அமரப்போவது யார்?

Author: Hariharasudhan
5 November 2024, 11:21 am

இன்று நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில், கமலா ஹாரீஸ் – டிரம்ப் இருவரிடையே கடும் போட்டி நிலவும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வாஷிங்டன்: உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மிகவும் பரபரப்புக்கு உள்ளான அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சாா்பில் போட்டியிடுகிறார். எதிராக, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சாா்பில் களம் காண்கிறார்.

இந்த நிலையில், தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் டிரம்ப்பை கமலா ஹாரிஸ் சிறிய வித்தியாசத்தில் ஓவர் டேக் செய்து கொண்டே வந்தார். ஆனால், கடைசி நேரத்தில் இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் கடுமையாகி உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இதனால் கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையே கடும் போட்டியும், இழுபறியும் நீடிக்கும் என்பது நிதர்சனமாகி உள்ளது.

குறிப்பாக, வட கரோலினாவில் முன்னாள் அதிபர் டிரம்புக்கு 48.4 சதவீதமும், கமலா ஹாரீஸுக்கு 47.2 சதவீதமும் ஆதரவு உள்ளது. அதேபோல், அரிசோனாவில், டிரம்ப் மற்றும் கமலா ஹாரீஸ் முறையே இருவருக்கும் முறையே 49, 46 சதவீதத்திலும், மெச்சிகனில் 47.1 மற்றும் 47.9 சதவீதமாக சிறு புள்ளிகள் வித்தியாசத்திலே போட்டி நிலவுவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கிராமப்புறங்கள் அதிகம் உள்ள, மத உணர்வுமிக்க, நிற சகிப்புத்தன்மை அல்லாத, வெள்ளையின உழைக்கும் மக்கள் அதிகம் நிறைந்த மாகாணங்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி தான் வெற்றி பெறும் எனவும், நகர்ப்புறம், பன்முகத்தன்மையைக் கொண்டாடுவோர் நிறைந்த, கல்லூரி பட்டதாரிகளை அதிகம் கொண்ட மாகாணங்களில் கமலா ஹாரீஸுக்கே அதிக வெற்றி வாய்ப்புகள் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

இதையும் படிங்க : பிச்சைக்காரரிடம் கடன் வாங்கிய தொழிலதிபர்.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்!

இவ்வாறு பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் களம், இன்று மாலை வாக்குப்பதிவுடன் தொடங்குகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நாளை காலை முதல் எண்ணப்பட்டு, அறிவிக்கப்படும் எனவும் அந்நாட்டுத் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும், டிரம்ப் மீதான ஊழல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளும் ஆளும் கட்சியால் முன் வைக்கப்பட்டு இருக்கின்றன. இதனையொட்டி, கமலா ஹாரீஸின் பூர்வீக ஊரான தமிழகத்தின் துளசேந்திரபுரத்தில் அவர் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!