ஆஸ்கர் விருது 2021…6 விருதுகளை தட்டிச்சென்ற ‘டியூன்’ திரைப்படம்: விருது பெற்ற மாற்றுத்திறனாளி நடிகர்…சைகை மொழியில் பேசிய நெகிழ்ச்சி சம்பவம்..!!
Author: Rajesh28 March 2022, 1:07 pm
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகர், நடிகை, திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.
94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் கொரோனா தொற்று பரவல் காரணமாக விழா ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது.
அதுபோலவே ஆஸ்கர் விருது கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில் ஆஸ்கர் விருது விழாவை இந்த ஆண்டு 3 பெண் தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இதுவரை வழங்கப்பட்ட விருதுகளில், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த சவுண்ட், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில், ‘DUNE’ என்ற திரைப்படம் விருதுகளை குவித்துள்ளன.
சிறந்த நடிகருக்கான விருதை ‘கிங் ரிச்சர்ட்’ என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை ‘தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே’ திரைப்படத்திற்காக, நடிகை ஜெசிகா சாஸ்டெய்ன் வென்றுள்ளார். சிறந்த அனிமேஷன் படமாக டிஸ்னி தயாரித்த ‘என்காண்டோ’ திரைப்படம் தேர்வாகியுள்ளது.
சிறந்த துணை நடிகைக்கான விருது ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ திரைப்படத்தில் நடித்த ஹரியானா டிபோஸ் என்ற நடிகை வென்றுள்ளார். இவர் நடிப்பு பிரிவில் ஆஸ்கர் விருது பெறும் முதல் குயர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடா திரைப்படத்திற்காக நடிகர் டிராய் காஸ்டர் சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டார். கோடாவில் மீனவர் மற்றும் தந்தையாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதை வென்ற முதல் காது கேளாதவர் என்ற பெருமையை டிராய் கோட்சூர் பெற்றார்.
53 வயதாகும் டிராய் கோட்சூர், தனது மிகப்பெரிய ரசிகர்கள் தனது மனைவி மற்றும் மகள் என்று கூறினார். இந்த விருதை காதுகேளாத நிலையில் பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் கோடா சமூகத்துக்கு அர்ப்பணிப்பதாக டிராய் கோட்சூர் தெரிவித்தார். கடந்த ஆண்டு சவுண்ட் ஆஃப் மெட்டலுக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரிஸ் அகமது, அனீஸ் கரியாவின் லைவ் ஆக்சன் குறும்படமான தி லாங் குட்பைக்காக இந்த ஆண்டு முதல் அகாடமி விருதை வென்றுள்ளார்.