கொரோனாவை விட கொடிய நோய்… தயாராக இருங்கள் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan24 May 2023, 5:06 pm
கொரோனா வைரஸ் கடந்த 2019 இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டது அனைவருக்கும் தெரியும். அது ஆய்வகத்தில் தோன்றியதா இல்லை இயற்கையாக தோன்றியதா என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
இருப்பினும், இந்த கொரோனா வந்து 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. இதனால் உயிரிழப்புகள், நேரம் எனப் பலவற்றை நாம் இழந்துள்ளோம். கொரோனா பாதிப்பு அந்தளவுக்கு மோசமாக இருந்தது.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்ட பின்னரே நிலைமை சற்றே மேம்பட்டது. கொரோனா வேக்சின் பணிகளுக்குப் பின்னரே தீவிர பாதிப்பும் உயிரிழப்புகளும் வெகுவாக குறைந்தது.
இதனிடையே உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இப்போது முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது கொரோனா வைரஸை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும் அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், கொரோனா வைரசை சமீபத்தில் சர்வதேச அவசர நிலையில் இருந்து நீக்கினோம். அதற்காக கொரோனா பாதிப்பால் எந்தவொரு ஆபத்தும் இல்லை. இனி இது எந்தவொரு சுகாதார அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று இல்லை.
பாதிப்பு அதிகரித்து அடுத்த அலையை ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தும் புதிய வேரியண்ட் உருவாக ஆபத்துகள் இருக்கவே செய்கிறது.
மேலும் கொடிய ஆற்றலுடன் மற்றொரு நோய்க் கிருமி உருவாகும் அச்சுறுத்தலும் இருக்கவே செய்கிறது. தொற்று நோய்கள் என்பது நாம் எதிர்கொள்ளும் ஒரே அச்சுறுத்தல்களில் ஒரு பகுதியாகவே இருக்கிறது. அனைத்து வகையான பிரச்சினைகளையும் சுகாதார அவசரநிலைகளையும் எதிர்கொள்ளும் வகையிலான ஒரு சர்வதேச வழிமுறைகள்தான் நமக்கு இப்போது தேவை.
அடுத்த ஒரு பெருந்தொற்று வரும் போது உலக நாடுகள் இணைந்து கூட்டாக வைரஸ் பாதிப்பை எதிர்க்க வேண்டும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்காக நாம் குறிப்பிட்ட இலக்குகளை 2030க்குள் அடைய வேண்டும்.
அப்போது தான் அடுத்த பெருந்தொற்றை நாம் ஒன்றாக இணைந்து எதிர்க்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்.