7 விமானங்களில் இந்தியர்களை மீட்க நடவடிக்கை..! வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்…

Author: kavin kumar
27 February 2022, 10:14 pm

டெல்லி : அடுத்த 24 மணி நேரத்தில் 7 விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் 7 விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா கூறியதாவது:-உக்ரைனில் இருந்து அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை வெளியேற்றுவதற்காக கங்கா ஆபரேஷன் மூலம் விமானங்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதில், அடுத்த 24 மணி நேரத்தில் ரூமேனியாவின் புகாரெஸ்ட் நகருக்கு ஐந்து விமானங்களும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகருக்கு 2 விமானங்களும் செல்ல இருக்கின்றன. உக்ரைனில் வான்வெளி மூடப்பட்டதால், ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ருமேனியாவில் இருந்து மாணவர்களை வெளியேற்றுவதற்கான வழியை நாங்கள் கண்டறிந்தோம். மாணவர்களை வெளியேற்ற சிறப்பு குழுக்களையும் அனுப்பியுள்ளோம். தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாகவே 4000 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர். உக்ரைனில் மேலும் 15 ஆயிரம் பேர் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹங்கேரி மற்றும் ருமேனியாவிற்கு எல்லையைக் கடக்கும் பாதை இருக்கிறது. இருப்பினும், லட்சக்கணக்கான வெளிநாட்டினர் ஒரே வழியே வெளியேற முயற்சிப்பதால் போலந்துக்கு வெளியேறும் வழி அடைக்கப்பட்டுள்ளது. ஹங்கேரி மற்றும் ருமேனியாவின் எல்லைகளுக்கு அருகில் இருப்பவர்கள் சரியான வழியை நோக்கி படிப்படியாக வழிநடத்தப்படுகிறார்கள். கங்கா ஆபரேஷனின் கீழ், ருமேனியா மற்றும் ஹங்கேரியில் இருந்து ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரம் பேர் உக்ரைனில் இருந்து தரை வழியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்காக விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நான் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் தூதர்களையும் தனித்தனியாக அழைத்து, இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த எனது கவலைகளை தெரிவித்துள்ளேன். இந்தியக் குடிமக்கள் அதிகம் வசிக்கும் இடங்களைப் பகிர்ந்துள்ளேன். இரு தூதர்களும் எங்களின் கவலைகளை கவனத்தில் கொண்டு இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

  • srinidhi shetty not able to act in ramayana movie because of yash பிரம்மாண்ட படத்தில் நடிக்க முடியாதபடி பண்ணிட்டாங்க? பிரபல ஹீரோவை கைகாட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி…