‘அறை முழுவதும் ரத்தக்கறை’…ஷேன் வார்னே மரணம் குறித்த ‘திடுக்’ உண்மை: தாய்லாந்து போலீஸ் விசாரணையில் தகவல்..!!
Author: Rajesh7 March 2022, 3:15 pm
தாய்லாந்தில் ஷேன் வார்ன் தங்கியிருந்த அறையில் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் தாய்லாந்தில் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 52 வயதான ஷேன் வார்ன், அவரது 3 நண்பர்களுடன் விடுமுறையை கழிப்பதற்காக தாய்லாந்து சென்றிருந்தார். தாய்லாந்தின் கோஹ் சாமுய் என்ற பகுதியில் அவருக்கு சொந்தமான வில்லா ஒன்று உள்ளது.
அதில் தான் ஷேன் வார்ன் தங்கியிருந்தார். விடுமுறையை கழிக்க சென்ற ஷேன் வார்ன் திடீரென உயிரிழந்ததால் அனைவரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்தனர். கடந்த 4ம் தேதி இரவு உயிரிழந்த ஷேன் வார்னின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், அவரது இறப்பு குறித்து விசாரணை நடத்திய தாய்லாந்து போலீஸார், ஷேன் வார்னின் இறப்பு குறித்த விவரங்களை தெரிவித்துள்ளனர். அதன்படி, ஷேன் வார்னின் அறையில் பல இடங்களில் ரத்தக்கறை இருந்திருக்கிறது. அவரது அறையின் தரை, அவரது துண்டு மற்றும் தலையணை ஆகியவற்றிலும் ரத்தக்கறை படிந்திருக்கிறது.
அறையில் உணர்வில்லாமல் இருந்த ஷேன் வார்னுக்கு அவரது நண்பர்கள் சிபிஆர் முதலுதவி அளித்துள்ளனர். 20 நிமிடங்கள் வரை சிபிஆர் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. அதன்பின்னர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை. எனவே அவர் தங்கியிருந்த இடத்தில் எந்த பிரச்னையும் இல்லை. வார்னுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான தடயங்களும் இல்லை என்று தாய்லாந்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
0
0