உயிரை பணயம் அகதிகளாக கடல் பயணம்…100 பேர் கடலில் மூழ்கி பலி: சட்டவிரோதமாக இடம்பெயரும் ஆப்பிரிக்க மக்களுக்கு நேரும் துயரம்..!!
Author: Rajesh4 April 2022, 4:36 pm
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் அடைய மத்திய தரைக்கடல் வழியாக படகுகளில் பயணம் செய்த போது நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 100 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலையில்லா திண்டாட்டம், வறுமை, உள்நாட்டுப் போர் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற காரணங்களால் அல்ஜீரியா, லிபியா போன்ற வட ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல, கள்ளத்தனமாக படகுகளில் பயணம் செய்வதை அவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஏற்கனவே இதுபோன்று சட்டவிரோதமாக இடம்பெயரும் மக்கள் விபத்தில் சிக்கிய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண்கள், சிறுவர்கள் என 100க்கும் மேற்பட்டவர்களை ஏற்றி கொண்டு மத்திய தரைக்கடல் வழியாக படகு ஒன்று ஐரோப்பாவை நோக்கி சென்றுள்ளது.
அப்போது திடீரென படகு பழுதானதால், சுமார் 4 நாட்களாக நடுக்கடலில் சிக்கி தவித்துள்ளனர். இதனையடுத்து, ஒரு கட்டத்தில் பீதியடைந்து கடலில் குதித்து தப்ப முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து கடல் நீரில் மூழ்கியது. இதில் 100க்கும் மேற்பட்ட மக்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு சிலரை மட்டும் உயிருடன் மீட்டதாக கூறப்படுகிறது.
0
0