இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் சார்லஸ் : அனைத்து மதத்தினரும் பங்கேற்பு.. விழாக்கோலத்தில் பக்கிங்ஹாம் அரண்மனை!
Author: Udayachandran RadhaKrishnan6 May 2023, 5:53 pm
பிரிட்டன் மன்னராக ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் முடிசூடப்பட்டார். லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற விழாவில், இளவரசர் சார்லஸ் முடிசூடிக்கொண்டார்.
சூப்பர் டூனிக்கா எனப்படும் தங்க அங்கி அணிந்து பாரம்பரிய அரியணையில் செங்கோல் ஏந்தி, மன்னராக முடிசூடிக் கொண்டார் மூன்றாம் சார்லஸ்.
மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு செயின்ட் எட்வர்ட் கிரீடத்தை சூடினார் தேவாலயத்தின் பேராயர். மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூடும் விழாவில், உலக தலைவர்கள் உள்பட 2,000 பேர் விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் குடியரசு துணை தலைவர் பங்கேற்றுள்ளார். சார்லஸ் மூடிசூட்டும் விழாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பைபிள் வாசித்தார்.
மேலும், பிரிட்டன் மன்னரின் முடிசூட்டும் விழாவில் இந்து ஒருவர் பைபிள் வாசித்தது இதுவே முதல்முறையாகும். இதனிடையே, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸிடம், பாரம்பரியம் மிக்க வைரம் உள்ளிட்ட கற்கள் பதிக்கப்பட்ட வாள், 2 செங்கோல்கள் வழங்கப்பட்டன. இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடிசூட்டிக்கொண்ட நிலையில், லண்டன் நகரமே விழாக்கோலமாக காட்சியளிகிறது.