சீனாவில் கோரதாண்டவம் ஆடும் கொரோனா : பல லட்சம் பேர் மரணமடைய வாய்ப்பு..? வீடியோவுடன் வல்லுநர் எச்சரிக்கை !!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2022, 10:06 pm
Corona - Updatenews360
Quick Share

2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவ தொடங்கியது கொரோனா வைரஸ். கடந்த 3 ஆண்டுகளாக ஒட்டுமொத்த உலக நாடுகளை பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது கொரோனா வைரஸ்.

கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில மாதங்களாக பெருமளவு ஓய்ந்திருந்தது. கொரோனா பரவலில் இருந்து உலகம் விடுதலையாகிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்த நம்பிக்கை தகர்ந்து கொண்டிருக்கிறது.

உலக நாடுகளுக்கு எங்கிருந்து கொரோனா வைரஸ் பரவியதோ அதே சீனாவில்தான் இப்போது கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது.
இந்த நிலையில்தான் சீனாவில் கொரோனா தற்போது அதிவேகமாக பரவி வருவதாக சர்வதேச ஊடகங்களும் மருத்துவ துறை வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

சீனாவில் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளதால் கொத்து கொத்தாக சடலங்கள் எரியூட்டப்படுகின்றனவாம். அதேநேரத்தில் இத்தகைய கொரோனா மரணங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் சீனா மறைத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மருத்துவ வல்லுநரான Eric Feigl-Ding வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு ஒட்டுமொத்த உலக நாடுகளை பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், சீனாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. சீனாவின் மக்கள் தொகையில் 60% பேர் அதாவது உலக மக்கள் தொகையில் 10% பேர் அடுத்த 3 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்; பல லட்சக்கணக்கான பொதுமக்கள் கொரோனாவால் உயிரிழக்க நேரிடும். இப்போதுதான் தொடங்கி இருக்கிறது என பதிவிட்டு வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு தகவல்களையும் தொடர்ந்து அவர் பதிவிட்டும் வருகிறார்.

மேலும் சீனாவின் குளிர்காலமான தற்போது கொரோனா 3 அலைகளாகப் பரவக் கூடிய அபாயம் உள்ளது; டிசம்பர் மாதம் இறுதி தொடங்கி பல்வேறு பண்டிகை கால கொண்டாட்டங்கள் சீனாவில் நடைபெறும். இதனால் கொரோனா பரவல் பெரும் உக்கிரமாக இருக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு எனவும் எச்சரிக்கப்படுகிறது.

நமது நாட்டில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 220 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொடர்பான விவரங்களை மத்திய பாஜக அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 482

    0

    0