இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசெபத்துக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா!!
Author: kavin kumar20 February 2022, 6:57 pm
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புக்கு திரை, விளையாட்டு, பல்வேறு நாட்டு தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆளாகி வருகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளும் இந்த பாதிப்புகளில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்த நிலையில், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது தாயாரான ராணி 2ம் எலிசபெத் வசிக்கும் வின்ட்சர் பகுதியில் அவரை சந்தித்து விட்டு திரும்பினார். அடுத்த 2 நாட்களில் இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
எனினும், ராணி பரிசோதனை செய்து கொண்டாரா என்பது பற்றிய தகவல் எதுவும் வெளிவரவில்லை. இந்த நிலையில், எலிசபெத் ராணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள எலிசபெத் ராணி லேசான குளிர் போன்ற அறிகுறிகளை அனுபவித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. எனினும் மகாராணி இந்த வாரம் வின்ட்சரில் கடமைகளைத் தொடர அவர் எதிர்பார்த்துள்ளதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிபடுத்தியுள்ளது. எலிசபெத் மகாராணியின் மகன் இளவரசர் சார்லஸ் இந்த மாதம் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றுக்குள்ளானர் என்பது குறிப்பிடத்தக்கது.