உலுக்கிய நேபாளம்… சக்திவாயந்த நிலநடுக்கம்.. தரைமட்டமான கட்டிடங்கள் : 128 பேர் பலியான சோகம்!!!
Author: Udayachandran RadhaKrishnan4 November 2023, 9:28 am
உலுக்கிய நேபாளம்… தரைமட்டமான கட்டிடங்கள் : 128 பேர் பலியான சோகம்!!!
நேபாளம் தலைநகர் காத்மண்டு பகுதியில் இருந்து மேற்கில் 500 கி.மீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில், லாமிடாண்டா பகுதியை மையமாக கொண்டு 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது நேற்றிரவு (அந்நாட்டு நேரப்படி) 11.47 மணியளவில் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்க ரிக்டர் அளவானது 6.4 என நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் கூறுகிறது. அதே வேளையில், ஜெர்மன் நில அதிர்வு மையத்தின் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகவும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் ரிக்டர் அளவுகோலில் படி 5.6 எனவும் நேபாள நிலநடுக்க அளவு பதிவாகி இருந்தது.
நேபாளம் ஜஜர்கோட் மாவட்ட அதிகாரி ஹரிஷ் சுந்தர் சர்மா கூற்றுப்படி, அம்மாவட்டத்தில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார். மேலும், அருகிலுள்ள ருகும் மேற்கு மாவட்டத்தில், காவல் துறை அதிகாரி நமராஜ் பட்டாராய், அம்மாவட்டத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.
இதுவரை 128 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 140 பேர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிகைகை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹாலின் அலுவலகம் கூறுகையில், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை உடனடியாக மீட்க நாட்டில் உள்ள மூன்று பாதுகாப்பு அமைப்புகளும் ஜஜர்கோட், ருகும் உள்ளிட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், டெய்லேக், சல்யான் மற்றும் ரோல்பா ஆகிய மாவட்டங்களிலிருந்தும் நிலநடுக்க பாதிப்புகள் பற்றிய செய்திகள் கிடைத்துள்ளன என நேபாள நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது போக, இந்தியாவில் டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நேபாள நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித சேதாரமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.