சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீவிபத்து…100 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல்: மீட்பு பணிகள் தீவிரம்..!!
Author: Rajesh24 April 2022, 6:15 pm
இமோ: நைஜீரியாவில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நைஜீரியாவில் பல இடங்களில் சட்டவிரோதமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நைஜீரியாவின் தெற்கு மாநிலமான இமோவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதாகவும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீவிபத்து ஏற்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, நாட்டின் எண்ணெய் வளங்கள் திருடப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நைஜீரியாவில் உள்ள சட்ட விரோத சுத்திகரிப்பு நிலையங்களை சோதனை செய்து அழிக்க அரசாங்கம் ராணுவத்தை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.