காசாவில் மருத்துவமனை மீது தாக்குதல்… 500 பேர் உயிரிழப்பு ; யார் காரணம்…? வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்…!!!
Author: Babu Lakshmanan18 October 2023, 9:49 am
காசாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 500க்கு மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் 12வது நாளாக நீடித்து வரும் நிலையில், காசாவில் உள்ள அல்-அக்லி அரபு மருத்துவமனையில் நேற்று ஏவுகணை தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 500 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. போரால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களும், தாக்குதலுக்கு பயந்து மருத்துவமனையில் தஞ்சமடைந்தவர்களும் இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு யாரால் நிகழ்த்தப்பட்டது என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை. ஆனால், காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலாலேயே 500 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் ஆயுதக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப்படை, காசாவில் செயல்பட்டு வரும் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழு ஏவிய ராக்கெட்டே காசா மருத்துவமனை மீது விழுந்ததாக வீடியோவையும் வெளியிட்டுள்ளது.