காசாவில் இருந்து உடனே வெளியேறுங்கள்…. பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan8 October 2023, 11:17 am
காசாவில் இருந்து உடனே வெளியேறுங்கள்…. பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!!
காசாவில் வசித்து வரும் பாலஸ்தீனிய மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது டுவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அந்த மோசமான நகரத்தில் இருந்து (காசா முனை) ஹமாஸ் நிலைநிறுத்தப்பட்டு, மறைந்திருந்து செயல்பட்டு வருகிறது.
அந்த பகுதிகளை நாங்கள் காட்டிட சிதைவுகளாக மாற்றப்போகிறோம். காசாவில் வாழும் மக்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள், அனைத்து பகுதியிலும் நாங்கள் முழு பலத்துடன் செயல்பட உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.
கடல் வழியாக இஸ்ரேலுக்கு நுழைய முயன்ற 7 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. வடக்கு காசாவில் இருந்து கடல் வழியாக இஸ்ரேலின் சிகிம் கடற்கரை பகுதிக்குள் நுழைய முயன்ற 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற ஆயுதக்குழு அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன.
அதேவேளை, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்றே பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்பட மேலும் சில ஆயுதக்குழுக்களும் காசா முனை, மேற்கு கரையில் செயல்பட்டு வருகின்றன.
இஸ்ரேல் மீது ஹமாஸ் 2வது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. இதனால், இஸ்ரேல் – காசா இடையே உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.