அந்த முட்டாளை கண்டுபிடித்த பின் பதவியில் இருந்து விலகுவேன் : எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 December 2022, 11:17 am

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.6 லட்சம் கோடிக்கு வாங்க கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் போட்டார்.

பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு, இறுதியாக கடந்த அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை அவர் கையகப்படுத்தினார். அப்போது முதல் அவர் டுவிட்டர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.

இதனால் அவர் சர்வதேச அளவில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். சமீபத்தில் தன்னை பற்றி பத்திரிக்கைகளில் எழுதி வந்த பத்திரிகையாளர்களின் டுவிட்டர் கணக்குகளை முடக்கிய எலான் மஸ்க் கடும் எதிர்ப்புக்கு பின் அவற்றை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

இந்த சூழலில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக ஊடக தளங்களை விளம்பரப்படுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட கணக்குகளை முடக்கப்போவதாக டுவிட்டர் அறிவித்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து நான் விலக வேண்டுமா? என எலான் மஸ்க் டுவிட்டரில் கருத்து கணிப்பு ஒன்றை முன் வைத்தார்.

இதில் 1.70 கோடிக்கு அதிகமான பயனாளர்கள் வாக்களித்தனர். இதில் 57.5 சதவீதம் பேர் டுவிட்டர் தலைமை பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என வாக்களித்தனர்.

இந்த கருத்துக்கணிப்பு முடிவு குறித்து எலான் மஸ்க் தரப்பில் எந்த பதிலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், எலான் மஸ்க் இன்று டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், இந்த வேலைக்கு முட்டாள்தனம் மிகுந்த ஒருவரை நான் கண்டுபிடித்த உடன் டுவிட்டர் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும், அதன் பின்னர் மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களுக்கு மட்டுமே நான் தலைமை பொறுப்பை வகிப்பேன் என பதிவிட்டுள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…