பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கான் அரசு: ஆதரவை விலக்கி கொண்ட MQM கட்சியால் எதிர்க்கட்சிகளின் பலம் உயர்வு..!!
Author: Rajesh30 March 2022, 10:11 am
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நாளை விவாதம் நடக்கிறது.
அதை தொடர்ந்து 3ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக எதிர்க்கட்சிகளுக்கு தனது பலத்தை காட்டும் விதமாக கடந்த 27ம் தேி தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான்கான் பிரமாண்ட பேரணியை நடத்தினார்.
பேரணியில் பேசிய இம்ரான்கான் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு இருக்கும் ஆதரவை காட்டும் விதமாக நேற்று இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணியை நடத்தினர். இந்த பேரணியில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு இம்ரான்கான் மற்றும் அவரது அரசை குற்றம் சாட்டி கடுமையாக பேசினர்.
இந்தநிலையில், இம்ரான்கான் அரசுக்கு ஆதரவளித்து வந்த MQM கட்சி ஆதரவை விலக்கி கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக MQM கட்சி அறிவித்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கானின் அரசு.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே இம்ரான்கான் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெரும்பான்மையை இழந்துள்ளதால் இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை ராஜினமா செய்வார் என்று கூறப்படுகிறது. MQM கட்சி அறிவிப்பால் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்து இம்ரான்கான் அரசின் பலம் 164 குறைந்தது.