என்னது..500 டன் எடையுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் இந்தியா மீது விழ வாய்ப்பா?: வார்னிங் கொடுத்த ரஷ்யா..!!
Author: Rajesh26 February 2022, 5:58 pm
மாஸ்கோ : சர்வதேச விண்வெளி மையத்தின் 500 டன் எடைகொண்ட பாகங்கள் இந்தியா, சீனா மீது விழும் என்று ரஷ்ய விண்வெளித்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது. 3வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா உக்ரைனில் பல இடங்களைக் கைப்பற்றியுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ரோஸ்கோஸ்மஸ் இதுகுறித்து தன்னுடைய ட்விட்டரில் கூறுகையில்,
ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் புதிய பொருளாதார தடைகள் ரஷிய விண்வெளி திட்டங்கள் உள்பட விண்வெளித்துறையில் பின்னடைவை ஏற்படுத்தும். நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பு தர மறுத்தால், கட்டுப்பாடு இல்லாமல் அமெரிக்கா அல்லது ஐரோப்பா மீது பாகங்களாக விழும் சர்வதேச விண்வெளி நிலையத்தை யார் காப்பாற்றுவது?.
500 டன் எடைகொண்ட சர்வதேச விண்வெளி மையத்தின் பகுதி இந்தியா மற்றும் சீனா மீது விழ வாய்ப்பு உள்ளது. நீங்கள் அவர்களை இவ்வாறு மிரட்ட விரும்புகிறீர்களா? சர்வதேச விண்வெளி மையம் ரஷியாவுக்கு மேல் பறக்கவில்லை. ஆகையால் அனைத்து ஆபத்துகளும் உங்களுக்குதான். நீங்கள் அதற்கு தயாராக இருக்கிறீர்களா? சர்வதேச விண்வெளி மையத்துடனான எங்களில் ஒத்துழைப்பை அழிக்க விரும்புகிறீர்களா? என தெரிவித்துள்ளார்.