முக்கிய கட்டத்தில் இஸ்ரேல் போர் : ட்விஸ்ட் அடித்த அதிபர் ஜோ பைடன்.. திடீர் எச்சரிக்கை!!!
Author: Udayachandran RadhaKrishnan16 October 2023, 10:34 am
முக்கிய கட்டத்தில் இஸ்ரேல் போர் : ட்விஸ்ட் அடித்த அதிபர் ஜோ பைடன்.. திடீர் எச்சரிக்கை!!!
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரால் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்படும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இதன்படி, காசா மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரி வான்தாக்குதலை தொடுத்து வருகிறது.
தரை வழி தாக்குதலுக்கும் தயாராக எல்லையில் லட்சக்கணக்கான வீரர்களை குவித்து வைத்துள்ளது. மக்கள் வெளியேற கெடு விதித்து இருந்த நிலையில் தற்போது வானிலை காரணமாக தாக்குதல் தொடங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
எந்த நேரமும் இஸ்ரேல் படைகள் காசாவுக்குள் தாக்குதலை நடத்தலாம் என்று சொல்லப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க ஹமாஸ் இயக்கத்தினரும் டெல் அவிவ் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேலாக உச்ச கட்ட போர் பதற்றம் அங்கு நிலவுகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலுவான ஆதரவை அளித்து வருகின்றன. அதேவேளையில், போர் விதிகளை பின்பற்றி தாக்குதல் நடத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே, காசா நகரை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:- காசாவை இஸ்ரேல் ஆக்கிரமித்தால் அது பெரிய தவறாக அமையும் என்று நான் நினைக்கிறேன்.
எனது பார்வையில் ஹமாஸ் மற்றும் ஹமாசின் தீவிராவாத செயல்பாடுகள் பாலஸ்தீன மக்களை பிரதிநிதிப்படுத்தவில்லை. எனவே, காசாவை மீண்டும் இஸ்ரேல் ஆக்கிரமித்தால் அது மிகப்பெரும் தவறாக அமையும்” என்றார்.
இதனிடையே, இஸ்ரேலுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அங்கு நேரில் விசிட் செய்யலாம் என்றும் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.