அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுகிறேன்; ஜோ பைடன் அதிகார பூர்வ அறிவிப்பு; அடுத்த வேட்பாளர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரா?

Author: Sudha
22 July 2024, 8:14 am

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற்ற உள்ளது.இதற்கிடையில் ஜோ பைடன் தேர்தலில் பங்கேற்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் ஏற்கனவே செய்தி வெளியிட்டது.

அமெரிக்காவில் 4 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்பை வீழ்த்தி ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜோ பைடன் அதிபராக செயல்பட்டு வரும் நிலையில் அவரது பதவிக்காலம் என்பது விரைவில் முடிவுக்கு வர உள்ளது.


பைடனின் வெற்றிக்கான வாய்ப்பு குறைந்து விட்டதாக ஒபாமா நம்புவதாகவும், மேலும் 81 வயதான அவர் “அவரது வேட்புமனுவின் நம்பகத்தன்மையை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்” என்றும் ஒபாமா சொன்னதாக செய்தித்தாள் செய்தி வெளியிட்டது.

ஜோ பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தார். ஆனால் அழுத்தம் அதிகரிக்கவே அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.


அமெரிக்க அதிபராக நான் பணியாற்றுவது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது எனது எண்ணமாக இருந்தாலும், தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன். மீதமுள்ள எனது பதவிக்காலத்தை சிறப்பாக பணி செய்து நிறைவேற்றுவதில் தீவிர கவனம் செலுத்துவேன்.

நான் எடுத்த முடிவு ஜனநாயக கட்சி மற்றும் நாட்டின் நலன் சார்ந்து எடுத்தது ஆகும். எனது இந்த முடிவு தொடர்பாக விரைவில் விரிவாக பேசுவேன். நான் மீண்டும் அதிபராக வேண்டும் என ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. என் மீது அமெரிக்க மக்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அமெரிக்க வரலாற்றில் அந்த பெருமையை பெற்ற முதல் கருப்பின பெண் என்ற அங்கீகாரத்தை அடைவார்.

இவர் இந்தியா வம்சாவளியை சார்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மூத்த ஜனநாயகக் கட்சி தலைவர்கள் கமலா ஹாரிஸிற்கு எதிராக கலமிறங்குவார்களா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம், அவர் கட்சியின் பல முக்கிய நிர்வாகிகளின் தேர்வாக உள்ளார். மேலும், ஜனநாயக கட்சியே கமலா ஹாரிஸுக்காக வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த கருத்து கணிப்புகளில், கமலா ஹாரிஸ் வேட்பாளராக களமிறங்கினால், ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாக முடிவுகள் கிடைத்துள்ளன.

இதனால், அமெரிக்க அதிபர் தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் டிரம்ப் வென்று மீண்டும் அதிபர் ஆவாரா? அல்லது கமலா ஹாரிஸ் வேட்பாளராக களமிறங்கி வெற்றி வாகை சூடி அமெரிக்க வரலாற்றின் முதல் பெண் அதிபர், அதுவும் கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் அதிபர் என்ற சரித்திரத்தை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு உலகளவில் எழுந்துள்ளது.

கடந்த ஜனவரி 2019 ஆம் ஆண்டு அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்த கமலா ஹாரிஸ், அதே ஆண்டு மார்ச் மாதத்தில் ஜோ பைடனை அதிபர் வேட்பாளராக ஆதரிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து ஜனவரி 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றார். இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண், முதல் கறுப்பின மற்றும் முதல் தெற்காசியப் பெண் இவர்தான். கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். தாய் இந்தியாவைச் சேர்ந்தவர். சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட வழக்கறிஞராகவும், கலிபோர்னியா மாநிலத்தின் அட்டர்னி ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார். இவர் அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்ற போது, ஒட்டுமொத்த இந்தியாவுமே பெருமை கொண்டது. குறிப்பாக அவரது தாயார் பிறந்த ஊரான தமிழ்நாட்டின் தஞ்சைப் பகுதியில் உள்ள பல கிராமங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தது. பல சமயங்களில் இந்தியா உடனான தனது உறவை, கமலா ஹாரிஸ் பெருமையாக வெளிப்படுத்தி உள்ளார்.

2020 இல் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட மாசசூசெட்ஸின் சென். எலிசபெத் வாரன், கமலா ஹாரிஸை “மக்களை பாதுகாப்பதிலும் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும் மிகச்சிறந்த ஒரு போராளி” என்று சொல்லியுள்ளார்

காங்கிரஸின் முற்போக்குக் குழுவின் தலைவி பிரமிளா ஜெயபாலும் ஹாரிஸை ஆதரித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு எனது வாக்கை அளிப்பதையும், அவர் அடுத்த ஜனாதிபதியாக வருவதை உறுதிப்படுத்த என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ் X இல் ஒரு இடுகையில் ஹாரிஸுக்கு தனது “முழு ஆதரவை” உறுதியளித்தார். “முன்பை விட இப்போது, டொனால்ட் டிரம்பை தோற்கடிக்க நமது கட்சியும் நாடும் விரைவாக ஒன்றிணைவது மிகவும் முக்கியமானது மற்றும் டிரம்ப் தேர்ந்தெடுக்கப் படுவது அமெரிக்க ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல், ” என்றார்.

மிசோரியில் இருந்து பிரதிநிதி கோரி புஷ் ஒரு அறிக்கையில் ஹாரிஸ் “இந்த நேரத்தில் தலைமை தாங்க தயாராக இருக்கிறார்” என்றார். “நாங்கள் நவம்பர் மாதத்தை எதிர்நோக்குகையில், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் பாரம்பரியத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும், டொனால்ட் டிரம்பை தோற்கடிப்பதற்கும் சிறந்த வேட்பாளர் என்பது எனக்கு தெளிவாகத் தெரிகிறது, மேலும் அமெரிக்காவின் ஜனாதிபதி பதவிக்கு அவர் போட்டியிடுவதை நான் சந்தேகத்திற்கு இடமின்றி ஒப்புதல் அளிக்கிறேன்” என்று புஷ் கூறினார்.


மேலும் காங்கிரஸின் பிளாக் காகஸ் பிஏசி மற்றும் காங்கிரஸின் ஹிஸ்பானிக் காகஸின் ஹாரிஸை ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஆதரித்துள்ளனர்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 621

    0

    0