ஜோர்டானில் துறைமுகத்தில் விபத்து.. மஞ்சள் நிறத்தில் கசிந்த வாயுவால் 12 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி வீடியோ!!
Author: Babu Lakshmanan28 June 2022, 10:31 am
ஜோர்டானில் துறைமுகத்தில் நிகழ்ந்த விபத்தில் மஞ்சள் நிற வாயு கசிந்து 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்டானில் அகுவாபா துறைமுகத்தில் இராட்சச கப்பல் ஒன்று கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு வந்த வாகனங்களில் இருந்து கிரேன் உதவியுடன் பெரிய அளவிலான உருளை வடிவிலான டேங்கர்களை அந்தக் கப்பலில் ஏற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது, திடீரென அந்த உருளை கிரேனில் இருந்து நழுவி கப்பலில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில், மஞ்சள் நிற விஷவாயு பெருமளவில் பரவி அந்த பகுதியில் சூழ்ந்தது. இதனை தொடர்ந்து, துறைமுக பணியாளர்கள் அந்த பகுதியில் இருந்து தப்பியோடினர். உடனடியாக, துறைமுகத்திற்கு அருகே உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதேபோல, குடியிருப்பில் வசித்தவர்கள் வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் வாயு கசிந்ததால் முதலில் 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. 234 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ பகுதிக்கு அந்நாட்டு பிரதமர் பீஷர் கசாவ்னே மற்றும் உள்துறை அமைச்சர் மஜென் அல்-பராயா ஆகியோர் ஆய்வு செய்தனர்.