ஏஆர் ரகுமானுக்கு பிறகு ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி… 14 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு கிடைத்த பெருமை.. பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து!!
Author: Babu Lakshmanan13 March 2023, 11:27 am
முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட The Elephant Whisperers எனும் குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையுலகின் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருதாகும். இந்த விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. முதல் ஆஸ்கர் விருதாக சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘கில்லர்மோ டெல் டோரோவின் பினோக்கியோ’ திரைப்படம் தட்டிச் சென்றது.
இதேபோல், Everything All At Once படத்தில் நடித்த கி ஹு ஹுவான் சிறந்த துணை நடிகர் பிரிவிலும், ஜேமி லீ கர்டிஸ் சிறந்த துணை நடிகை பிரிவிலும் ஆஸ்கர் விருதினை வென்றனர். சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கர் விருது ஆல் கொயட் ஆன் த வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) படத்திற்காக ஜேம்ஸ் ஃப்ரெண்ட்க்கு வழங்கப்பட்டது. சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை ‘ஆன் ஐரிஷ் குட்பை’ (An Irish Goodbye) படமும், இந்த ஆண்டின் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது ‘நவால்னி’ (Navalny) படத்துக்கும் கொடுக்கப்பட்டது.
சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர் விருது ‘தி வேல்’ படத்திற்கு கிடைத்தது. சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது பிளாக் பந்தர் படத்துக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக,தமிழ்நாட்டின் முதுமலை யானைகள் தொடர்பான The Elephant Whisperers என்ற ஆவணப் படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. காட்டில் தாயை பிரிந்து பரிதவிக்கும் ரகு, பொம்மி ஆகிய இரு குட்டி யானைகளை பராமரிக்கும் பழங்குடியின தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.
இதேபோல, RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கிரவாணி இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
இதன்மூலம், ஏஆர் ரகுமானுக்கு பிறகு ஆஸ்கர் விருதை வென்ற இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றார் கீரவாணி. கடந்த 2009ல் Slumdog Millonaire படத்திற்காக ஏஆர் ரகுமான் சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருந்த நிலையில், சிறந்த பாடலுக்கான விருதை கீரவாணி பெற்றார்.
இந்த நிலையில், நாட்டு நாட்டு பாடல், The Elephant Whisperers-க்காக ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.