சென்னையைச் சேர்ந்த புதுமணத் தம்பதி இந்தோனேசியாவில் உயிரிழப்பு… HoneyMoon சென்ற போது நிகழ்ந்த சோகம்..!!!
Author: Babu Lakshmanan10 June 2023, 11:26 am
சென்னை ; சென்னையைச் சேர்ந்த புதுமணத் தம்பதி இந்தோனேசியாவில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் விபூஷ்னியா. இவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், சென்னையைச் சேர்ந்த மருத்துவர் லோகேஷ்வரனுக்கும் கடந்த ஜுன் 1ம் தேதி வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு, இருவரும் இந்தோனேசியாவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.
இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் மோட்டார் போட்டில் சென்றபோது போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக படகில் இருந்து இருவரும் தண்ணீரில் விழுந்தனர். இதனை கண்டவர்கள் இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால், லோகேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டார். அதேவேளையில், விபூஷ்னியாவின் உடல் நீண்ட தேடுதலுக்கு பிறகு சிக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய, தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரின் உடல்களை இந்தியாவிற்கு எடுத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். திருமணமான 10 நாளில் ஹனி மூனுக்காக இந்தோனேசியா சென்ற மருத்துவ தம்பதி தண்ணிரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.