அடங்காத வடகொரியா…மீண்டும் உலக நாடுகள் அதிர்ச்சி: ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை சோதனை!!

Author: Rajesh
17 April 2022, 9:54 am

சியோல்: வடகொரியா நாடு ஜப்பான் கடல் பகுதியில் இரண்டு ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்துள்ளது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியா அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஹைப்பர் சோனிக் ஏவுகணை என பல்வேறு வகையிலான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து வருகிறது.

அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலும், தங்கள் ஆயுத பலம் பற்றி உலக நாடுகளுக்கு வெளிப்படும் வகையிலும், இந்த ஏவுகணைகளை பரிசோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி, 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா பரிசோதனை செய்தது.

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனையை நடத்தி அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த வகை ஏவுகணையானது ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவுக்கு செல்லும் திறன் பெற்றது.

அமெரிக்காவையும் அடைந்து தாக்க கூடிய வல்லமை பெற்றது. இந்த ஏவுகணை 1,100 கி.மீ. தொலைவுக்கு பறந்து சென்றுள்ளது. இதேபோன்று, 6 ஆயிரம் கி.மீ. உயரத்தில், ஒரு மணிநேரம் பறந்து சென்று பின்பு ஜப்பானிய கடல் பகுதிகளில் விழுந்துள்ளது. இந்நிலையில், ஜப்பான் கடல் பகுதியில் மீண்டும் இரண்டு ஏவுகணைகளை ஏவி வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.

இதனை தென்கொரியாவின் பாதுகாப்பு படை பிரிவு இன்று காலை தெரிவித்து உள்ளது. வடகொரியாவின் ஹேம்ஹங் பகுதியில் வைத்து பரிசோதனை செய்யப்பட்ட இந்த இரு ஏவுகணைகளும் 110 கிலோ மீட்டர்கள் (68 மைல்கள்) தொலைவை சென்று தாக்கியுள்ளது.

அதிக அளவாக 25 கி.மீ. (15.5 மைல்கள்) உயரத்திற்கு பறந்து சென்றுள்ளன என்றும் தெரிவித்து உள்ளது. வடகொரியாவின் சமீபத்திய பரிசோதனையை தொடர்ந்து தென்கொரியாவின் பாதுகாப்பு, ராணுவ மற்றும் உளவு அமைப்புகள் இணைந்து கூட்டாக அவசரகால ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளன.

  • ஓடிடி-யில் வெளியாகும் தீபாவளி மாஸ் ஹிட் படம்…அட எப்போங்க..!
  • Views: - 1934

    0

    0