மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல்…கொழும்பில் தீவிரமடையும் போராட்டம்: 23 பேர் காயம்…ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிப்பு..!!

Author: Rajesh
9 May 2022, 3:42 pm

கொழும்பு: மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் காரணமாக இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார். இதனால் போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

எனினும் மக்கள் போராட்டம் ஆங்காங்கே தீவிரமாக நடைபெறுகிறது. அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்று மகிந்த கூறி உள்ளார். இந்நிலையில், கொழும்புவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு இன்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.

இதேபோல் பிரதமரின் ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு, பிரதமர் பதவி விலக வேண்டாம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மகிந்தவின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் போராட்டக்காரர்களை மகிந்த ஆதரவாளர்கள் தாக்கினர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவையும் தாக்க முயன்றதால் பெரும் பதற்றம் உருவானது.

போலீசார், மகிந்த ஆதரவாளர்களின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில், கொழும்புவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொழும்பு தெற்கு, வடக்கு, மத்திய பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருக்கும் என காவல்துறை அறிவித்துள்ளது. மகிந்த ராஜபக்சேவே இந்த போராட்டத்தை தூண்டியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…