உக்ரைன் மீது அதிநவீன ஏவுகணைகளால் அதிரடி தாக்குதல்: ஆயுதக் கிடங்கை தகர்த்தது ரஷ்யா..!!
Author: Rajesh20 March 2022, 9:44 am
மாஸ்கோ: உக்ரைன் – ருமேனியா எல்லைப் பகுதிக்கு அருகே இருந்த ராணுவ ஆயுத கிடங்கை, அதிநவீன ஏவுகணைகளை வீசி ரஷ்ய ராணுவத்தினர் தகர்த்துள்ளனர்.
உக்ரைன் மீது கடந்த 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்துவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையே தாக்குதலில் இருந்து உயிர்பிழைக்க ஏராளமான உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை கைவிடும்படி ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்ற உத்தரவிட்டும், இரு நாடுகளுக்கு இடையிலான போர் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைனில் உள்ள ராணுவ ஆயுத கிடங்கை தகர்க்க, அதிநவீன ‘ஹைப்பர்சோனிக்’ ஏவுகணைகளை வீசி ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த வகை ஏவுகணைகளை ரஷ்ய படையினர் பயன்படுத்துவது இதுவே முதன்முறையாகும்.
இதற்கிடையே உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது, உக்ரைன் நகரங்கள் அனைத்தையும் அடிபணிய வைக்க ரஷ்யா முயற்சித்து வருகிறது. இப்படி ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தால் பல தலைமுறையினர் அதற்கான பாதிப்பை சந்திக்க நேரிடும்.
ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, நேற்று முன்தினம் மூன்று ரஷ்ய விண்வெளி வீரர்கள் ‘சோயுஸ் எம்.எஸ்., 21’ விண்கலத்தில் புறப்பட்டனர். சில மணி நேர பயணத்திற்குப் பின், அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.
அவர்கள் மூவரும் உக்ரைன் நாட்டின் தேசிய கொடியில் உள்ள நிறங்களைப் போல் மஞ்சள் மற்றும் நீல நிற சீருடைகளை அணிந்து சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அந்தப் படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.