ரஷ்யா அதிபர் புதினை கொல்ல முயற்சி.. அதிபர் மாளிகையில் நடத்தப்பட்ட தாக்குதல் ; உடனே ரஷ்யா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!
Author: Babu Lakshmanan3 May 2023, 7:45 pm
ரஷ்ய அதிபர் புதினை கொலை செய்வதற்காக அதிபர் மாளிகையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 400 நாட்களையும் கடந்து நடந்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவுக்கு எதிரான இந்தப் போரில், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.
மேலும், உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் கொல்லப்படுவார் என்று உக்ரைன் அதிபர் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரஷிய அதிபர் மாளிகையான கிரிம்லினை குறிவைத்து நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்த சம்பவம் உலகநாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிபர் புதினை கொலை செய்யும் நோக்கில் 2 டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாகவும், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்யா தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், அதிபர் மாளிகையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்த டிரோன் பயங்கரவாத தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, மாஸ்கோ நகருக்கு வெளியே ஒடின்ஸ்வொஸ்கை மாவட்டத்தில் உள்ள தனது பங்களாவில் அதிபர் புதின் தங்கி இருந்ததாகக் கூறிய ரஷ்யா, இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.