ரூ.2 கோடி மதிப்பிலான ஐஸ் போதைப் பொருட்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு ; போதைப் பொருள் மாஃபியா உள்பட 2 பேர் கைது..!!
Author: Babu Lakshmanan10 January 2023, 10:54 am
இலங்கை புத்தளம் மாவட்டம் கற்பிட்டி சின்னக்குடியிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கற்பிட்டி போலீஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஸ் போதைப் பொருளை முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்வதாக போலீஸ் சிறப்பு புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை, கற்பிட்டி போலீஸாருக்கு வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, ஆட்டோவை நிறுத்தி சோதனைக்குட்படுத்திய போது ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அப்போது, இரண்டு கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கற்பிட்டி துரையடி, மற்றும் மட்டக்குழி பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரில் ஒருவர் பிரபல போதைப் பொருள் வியாபாரி எனவும், பல தடவைகள் போலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கற்பிட்டி போலீஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடையது என்று போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கற்பிட்டி போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள், 18,000 ரூபாய் பணம், இரண்டு செல்போன்கள் மற்றும் கடத்திச் செல்ல முற்பட்ட ஆட்டோ ஆகியவற்றை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி போலீசார் தெரிவித்தனர்.