இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து: தமிழகத்தின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழாவில் கௌரவம்..!!
Author: Rajesh15 May 2022, 2:39 pm
வாடிகன்: தமிழ்நாட்டின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் கலாச்சார நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா இன்று ரோம் நகரில் நடைபெறுகிறது. முன்னதாக செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ் , செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அருட்சகோதரிகளின் தமிழ்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழக மண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதமாக நடைபெறும் இந்த நிகழ்வில் தமிழக மக்கள் சார்பில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. அன்பு தான் எல்லாம் என்றிருக்கும் இந்த உலகில் அன்பைப் பரிமாறி கொள்ளத்தான் அன்பு மூலம் உங்களுக்கு நன்றி சொல்ல தான் முதல்வர் எங்களை இங்கு அனுப்பினார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், மறைசாட்சியை வேதசாட்சியாக அறிவிக்க கூடிய இடத்தில் இருக்கும் புனிதர், எங்கள் வீட்டிற்கு அருகே பிறந்து வாழ்ந்து மறை சாட்சியாக எய்தியவர். போப் ஆண்டவர் கலந்து கொண்ட ஆலயத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளோம் என்றார்.
மேலும், இத்தாலியில் எதிரொலித்த தமிழின் பெருமை.. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தமிழைப் பெருமைப்படுத்தினர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.