தோண்ட தோண்ட கிடைக்கும் பிணங்கள்… 8 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை : துருக்கி – சிரியாவில் நடந்த கோர சம்பவம்!
Author: Babu Lakshmanan8 February 2023, 10:50 am
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 8,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டெப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. நுர்தாகி அருகே 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக எரிவாயு பைப்லைன் வெடித்து சிதறியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே, துருக்கியில் அவசர நிலையை பிரகடனம் செய்த அரசு, மீட்புப்பணிகளை தீவிரப்படுத்தப்பட்டது.
துருக்கியை தொடர்ந்து சிரியாவிலும் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், மீட்பு பணிகளும், தேடுதல் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடரும் மீட்பு பணிகளால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த துயரத்தில் இருந்து மீளாத நிலையில், துருக்கியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், அந்நாட்டு மக்கள் பீதியுடன் வசித்து வருகின்றனர். மேலும், உணவு, மருந்து போன்றவற்றை வாங்குவதற்காக வரிசையில் காத்து கிடக்கின்றனர். இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் துருக்கிக்கு மீட்பு பணிகளுக்கும், நிவாரண பொருட்களை வழங்கியும் உதவி செய்து வருகின்றன.
இதனிடையே, துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சந்தேகம் தெரிவித்துள்ளது.
0
0