உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி… தங்கம் விலை கிடுகிடு உயர்வு… பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.8 உயருகிறது…?
Author: Babu Lakshmanan24 February 2022, 11:05 am
சென்னை : உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 2 லட்சம் படை வீரர்களை குவித்தது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், இதனை எல்லாம் பொருட்படுத்தாத ரஷ்யா அதிபர் புதின் , உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளது. சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் ஆயுதங்களால் ராணுவ தளவாடங்களை ரஷ்ய படைகள் தாக்கி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் மூண்டுள்ளதால், இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
அதாவது, கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு, ரஷ்யாவில் இருந்து இயற்கை திரவ எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்யும் நிலையில், போர் சூழலால் இந்த விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுமா..? என்ற அச்சம் உள்ளதாலும் விலை எகிறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவில், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை லிட்டருக்கு ரூ.8 வரை உயரும் நிலை உருவாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.864 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38.616க்கு விற்பனையாகிறது.
மேலும், இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,936 புள்ளிகள் சரிந்து 55,296 ஆக வர்த்தமாகியது. டாடா ஸ்டீல், இந்துஸ்இண்ட் பேங்க், பாரதி ஏர்டெல், டெக் மகிந்திரா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 572 புள்ளிகள் சரிந்து 16,491 ஆக வர்த்தமாகியது. அதானி போர்ட்ஸ், டாடா மோட்டர்ஸ், டாடா ஸ்டீல், யுபிஎல் மற்றும் இந்தூஸ்இண்ட் பேங்க் ஆகியவற்றின் பங்குகள் சரிவை சந்தித்தது.