“எங்கள் மண்ணில் உங்களுக்கு என்ன வேலை..?” ரஷ்ய போர் வீரரிடம் ஆவேசமாக பேசிய பெண்ணின் வீடியோ வைரல்!!

Author: kavin kumar
25 February 2022, 8:54 pm
Quick Share

ஆயுதம் தாங்கிய ரஷ்ய வீரரிடம், உங்களுக்கு எங்கள் நாட்டில் என்ன வேலை என்று கேள்வி எழுப்பிய உக்ரைன் பெண்ணின் வீடியோ பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

உக்ரைன் நாட்டின் மீது நேற்று ரஷ்யா போர் தொடுத்திருந்த போது, அதில் சரமாரியாக குண்டு வீச்சுகள் நிகழ்ந்தது. மேலும், இந்தப் போரில் தொடரப்பட்ட ஏவுகணை தாக்குதல் மூலம் உக்ரைன் நிலைகுலைந்து காணப்பட்டது. நேற்றைய தாக்குதலின் போது உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் பலியானதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் 2 ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் வீழ்த்தினர். 2 ரஷ்ய துருப்புகளை உக்ரைன் ராணுவம் சிறைப்பிடித்தும் இருக்கிறது.

மேலும், ரஷ்யாவிடம் இருந்து கீவ் விமான நிலையத்தை மீண்டும் கைப்பற்றி உள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.மேலும், ரஷ்யாவுக்கு எதிராக முழு ராணுவத்தையும் திரட்டும் பணிகளை விரைந்து முடிக்கும்படி ராணுவ அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் ஆபத்து நிறைந்த கீவ் நகருக்குள் எந்நேரம் வேண்டுமானாலும் ரஷ்யா நுழைந்துவிடும் என்பதால், அதை தடுக்கும் விதமாக அந்நகரை இணைக்கும் பாலங்கள் மற்றும் சாலைகளை உக்ரைன் தகர்த்து வருகிறது.

இந்த நிலையில் கீவ் நகருக்குள் ஊடுருவி உள்ள ஆயுதம் தாங்கிய ரஷ்ய வீரரிடம், “உங்களுக்கு எங்கள் மண்ணில் என்ன வேலை?” என்று கேள்வி எழுப்பிய உக்ரைன் பெண்ணின் வீடியோ வைரலாகி உள்ளது. அந்த பெண் ரஷ்ய ராணுவ வீரரிடம் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியுள்ளார். அந்தப் பெண் சற்றும் அஞ்சாமல் ரஷ்ய வீரரிடம் வாதிடுவதை வழிப்போக்கர் ஒருவர் வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர, அது தற்போது உலகம் முழுவதும் வைரலாகிவிட்டது.அந்த வீடியோவில் அப்பெண், ஆயுதம் ஏந்திய ரஷ்ய வீரரைப் பார்த்து, “நீங்கள் யார்?” எனக் கேட்கிறார்.

அந்த வீரர் “எங்களுக்கு இங்கே வேலை இருக்கிறது. நீங்கள் அந்தப் பக்கம் செல்லுங்கள்” எனக் கூறுகிறார்.”பாசிசவாதிகளே… இங்கே உங்களுக்கு என்ன வேலை?” என்று மீண்டும் அந்தப் பெண் உக்கிரமாகப் பேசுகிறார். அதற்கு அந்த வீரர் நிதானமாக, “நமது பேச்சால் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் செல்லலாம்” எனக் கூறுகிறார். ஆனால் அந்தப் பெண் சற்றும் சமாதானமடையவில்லை. உங்கள் பாக்கெட்டில் கொஞ்சம் சூரியகாந்தி விதையைப் போட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் வீழ்த்தப்பட்டு உக்ரைனில் புதைக்கப்படும் போது அந்த விதையாவது வளரட்டும் என்று கூறி விட்டு செல்கிறார். சூரியகாந்தி மலர், உக்ரைன் நாட்டின் தேசிய மலர் ஆகும். அடையாளம் தெரியாத அந்த பெண்ணின் துணிச்சலுக்கு டுவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

  • Napolean 6 மாதம் கழித்து மீண்டும் தனுஷுக்கு திருமணம் செய்வேன் – குண்டு தூக்கி போட்ட நெப்போலியன்!
  • Views: - 1396

    0

    0