பாகிஸ்தானில் ஆட்சியமைப்பது யார்? 4வது முறையாக பிரதமர் ஆகிறார் நவாஸ் ஷெரீப்? வெளியான தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2024, 7:29 pm

பாகிஸ்தானில் ஆட்சியமைப்பது யார்? 4வது முறையாக பிரதமர் ஆகிறார் நவாஸ் ஷெரீப்? வெளியான தகவல்!

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்து ஐந்து நாட்களுக்குப் பிறகும், நாட்டில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கப் போகிறது மற்றும் பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார் என்பது இன்னும் பெரிய குழப்பமாகவே உள்ளது.

இப்படியான சூழலில் நான்காவது முறையாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- (நவாஸ்) கட்சியின் நிறுவனர் நவாஸ் ஷெரீப் பிரதமராவார் என அவரின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் கூறும்போது, “நான்காவது முறையாக நவாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்பார் என்ற எனது வார்த்தைகளில் நான் இன்னும் உறுதியாக இருக்கிறேன்” என கூறினார்.

தேர்தலில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து ஷெபாஸ் ஷெரீப் கூறும் போது, “பல பகுதிகளில் முஸ்லிம் லீக்- (நவாஸ்) வேட்பாளர்கள் தோற்று சுயேச்சைகள் வெற்றி பெற்றனர், கைபர் பக்துன்க்வாவில், பெரும்பான்மையானவர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் தான். அப்படியானால் மோசடி மூலம் வெற்றி பெற்றதாக அர்த்தமா? மேலும் சிந்து மற்றும் பலுசிஸ்தானில் சுயேச்சைகள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

எங்கள் கட்சி சார்பில், சுயேச்சைகள் சுதந்திரமானவர்கள், அவர்கள் ஆட்சி அமைக்க விரும்பினால் தாராளமாக தொடரலாம், நாங்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்து எங்கள் கடமையை மேற்கொள்வோம், எப்படியிருந்தாலும் நவாஸ் ஷெரீப் பிரதமராவார் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

பிப்ரவரி 8ஆம் தேதி நடந்த பாகிஸ்தான் நாடளுமன்ற தேர்தலில் நேரடி வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யப்படும் 266 இடங்களில் இம்ரான் கானின் PTI ஆல் ஆதரவளிக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களை வென்றனர். பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் PML-N கட்சி 75 இடங்களிலும், முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் PPP 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Kanguva Day 3 boxoffice collection கங்குவா பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நாள் 3: 69% வீழ்ச்சியால் திணறும் சூர்யாவின் பீரியோடிக் ஆக்ஷன் படம்!
  • Views: - 1958

    0

    0